Published : 22 Mar 2024 11:37 AM
Last Updated : 22 Mar 2024 11:37 AM
விழுப்புரம்: மேல்பாதி கிராமத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்ட திரௌபதி அம்மன் திருக்கோயில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறக்கப்பட்டது.
விழுப்புரம் அருகிலுள்ள மேல்பாதி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திரௌபதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.
இக்கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 2023, ஜூன் 7ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர். இதைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட திரௌபதி அம்மன் திருக்கோயிலை மீண்டும் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஒருதரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கில் விசாரணையை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், திரௌபதி அம்மன் கோயிலைத் திறந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் ஒருகாலப் பூஜையையும் மட்டும் நடத்த வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கடந்த இரு நாள்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பழனி, எஸ்.பி. தீபக் ஸ்வாட்ச் , வருவாய்த்துறை அலுவலர்கள்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் திரௌபதி அம்மன் கோயிலுக்குவருவாய்த்துறை அலுவலர்களால் வைக்கப்பட்ட சீலை மார்ச் 22ம் தேதி அகற்றி திறப்பது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்படும் பூசாரியைக் கொண்டு தினந்தோறும் காலை நேரத்தில் ஒருகாலப் பூஜையை நடத்துவது, பொதுமக்கள் யாரையும் கோயிலுக்குள் அனுமதிக்காமல் தடை விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது முன்னிலையில் இன்று காலை வருவாய் ஆய்வாளர் கோயில் சீலை அகற்றினார்.
இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட பூசாரிகோயிலுக்குள் சென்று சுத்தம் செய்தார். பின்னர் திரெளபதி அம்மனுக்கு பூசாரி சிறப்புபூஜைகள் செய்தார். இதைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், எஸ்.பி. தீபக் ஸ்பாட்ச் தலைமையில்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல்: மேல்பாதி கோயில் திறக்கப்படுவதை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலையில் போலீஸார் தடுத்து நிறுத்தி அனுமதிக்க மறுத்தனர். இதனை தொடர்ந்து ஆட்சியர் பழனி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதிஷ் ஆகியோரை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கோயில் திறக்கும் நிகழ்வு தொலைக்காட்சிகளில் வெளியானது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் விடியோ மற்றும் புகைப்படங்களை முறைப்படி வெளியிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT