Published : 22 Mar 2024 10:09 AM
Last Updated : 22 Mar 2024 10:09 AM

கேஜ்ரிவால் கைது எல்லை தாண்டிய எதேச்சதிகாரம்: முத்தரசன் கண்டனம்

முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் | கோப்புப் படம்

சென்னை: ஒரு மாநில முதல்வரை, எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கியத் தலைவரை கைது செய்திருப்பது எதேச்சதிகாரத்தின் எல்லை தாண்டிய பாசிச காட்டுமிராட்டி வெறித்தன தாக்குதலின் வெளிப்பாடாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி மாநில அரசின் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று (21.03.2024) முன்னிரவு நேரத்தில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும் என்ற முறையீட்டை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில் அமலாக்கத்துறை ஒரு மாநில முதல்வரை, எதிர்கட்சி கூட்டணியின் முக்கியத் தலைவரை கைது செய்திருப்பது ஏதேச்சதிகாரத்தின் எல்லை தாண்டிய பாசிச காட்டுமிராட்டி வெறித்தன தாக்குதலின் வெளிப்பாடாகும்.

விருப்பு, வெறுப்புகள் இல்லாமல், நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டிய தேர்தல் நடைமுறைக்கு பெரும் குந்தகம் ஏற்படுத்தும் அப்பட்டமான அச்சுறுத்தலாகும். பொதுமக்களிடம பீதி ஏற்படுத்தி தேர்தல் ஆதாயம் தேடும் மிக மலிவான செயலாகும்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பழம் பெரும் அரசியல் கட்சியும், விடுதலைப் போராட்டத்தில் முன்னணி வகித்த பெருமை கொண்ட காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. டெல்லி மாநில அரசின் துணை முதலமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என ஆளுநர் அதிகார வெறியோடு ஆட்டம் போடுகிறார்.

கடந்த பத்தாண்டு கால வரலாற்றில் முதன் முறையாக எதிர்கட்சிகள் ஒன்றுபட்டு, இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த வலிமை வாய்ந்த கூட்டணியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத, படுதோல்வி அடையும் என்பது உறுதியாகி வருவதை கண்டு ஆத்திரமடைந்த பாஜக எதிர்க்கட்சிகளை மிரட்டி. ஒடுக்கி, கூட்டணியை சிதறடிக்கும் வன்முறைக்கு அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற தற்சார்பு அமைப்புகளை ஆளும் கட்சியின் ஆயுதங்களாக கையில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த பாசிச வகைப்பட்ட தாக்குதலை நாட்டு மக்கள் பேரெழுச்சி கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

தற்போதுள்ள நிலையில் குடியரசுத் தலைவரும் மற்றும் உச்சநீதிமன்றமும் ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறல் நடவடிக்கைகளை சட்டரீதியாக தடுக்க முடியும் என்பதால் உடனடியாக குடியரசுத் தலைவரும், உச்ச நீதிமன்றமும் அமலாக்கத் துறையின் நடவடிக்கையில் தலையிட்டு தடுக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் களத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு கிடைப்பதையும், நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடைமுறைகள் அமைவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும், உடனடியாக அரவிந்த் கேஜ்ரிவால் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” என்று முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x