Published : 21 Mar 2024 07:28 PM
Last Updated : 21 Mar 2024 07:28 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ ரா.குமரகுரு அறிவிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குமரகுரு 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் எடைக்கல் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தற்போது உளுந்தூர்பேட்டை கந்தசாமி நகரில் வசித்து வருகிறார்.
தனது 21 வயதில் அதிமுக கிளைக் கழக செயலாளராக கட்சிப் பணியில் ஈடுபட்டவர், தொடர்ந்து ஒன்றியக் கழக செயலாளர், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர், தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் என கட்சிப் பதவிகளை வகித்து வருகிறார்.
இவர், 2006-ல் திருநாவலூர் எம்எல்ஏ-வாகவும், அதையடுத்து 2011 முதல் 2021 வரை உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ-வாகவும் தொடர்ச்சியாக 3 முறை பதவி வகித்துள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி பெயர் மயில்மணி. நமச்சிவாயம் என்ற மகனும், இலக்கியா என்ற மகளும் உள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கடந்த முறை திமுக வென்றது. திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி வென்றிருந்தார். இம்முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளராக, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த வியபாரியான தே.மலையரசன் (49) என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் திமுக - அதிமுக நேரடி மோதல் உறுதியாகியுள்ள நிலையில் அங்கு போட்டி சுவாரஸ்மாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT