Published : 21 Mar 2024 06:15 PM
Last Updated : 21 Mar 2024 06:15 PM
புதுச்சேரி: “மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் வேட்பாளரை அறிவிக்க முடியாத அச்சத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் உள்ளதையும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்” என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவும், இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், போட்டியிடவுள்ள நிலையில், மூன்றாவது அணியாக களம் இறங்கும் அதிமுக தனது புதுச்சேரி மக்களவை தொகுதி வேட்பாளராக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தனை அறிவித்தது. வேட்பாளர் அறிமுகத்தை அடுத்து உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழ்வேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறுகையில், "புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி இரண்டு நாட்கள் ஆகியும் வேட்பாளரை நிறுத்த முடியாமல் ஆளுஙகட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி திணறி வருகின்றது. காங்கிரஸ் கட்சியும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. தற்போது எம்.பி-யாக உள்ள வைத்திலிங்கம் கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.
மாநில அந்தஸ்து, புதுச்சேரி துறைமுக விரிவாக்கம், விமான நிலைய விரிவாக்கம், நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்ப்போம் என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இவற்றை அதிமுக பெற்று தரும். பாஜக, காங்கிரஸ் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பாளரை அறிவிக்கக்கூட முடியாத சூழ்நிலையில் அச்சத்தில் உள்ளார்கள். இதை அதிமுக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும்.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகளான பாஜகவாக இருந்தாலும் சரி காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி புதுச்சேரி மாநில நன்மைக்கு தடையாகவும், தொடர்ந்து துரோகமும் செய்து வருகின்றார்கள். அதை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்வோம்" என்று குறிப்பிட்டார்.
இதன்பின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்வேந்தன் கூறுகையில், "புதுச்சேரியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு மீதும், ஏற்கெனவே ஆண்ட காங்கிரஸ் அரசு மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளார்கள். மக்களுக்கு உண்மை தெரியும், மக்கள் நலனுக்காக அதிக போராட்டங்களை அதிமுக முன்னெடுத்துள்ளது" என்றார்.
34 வயதான தமிழ்வேந்தன், புதுச்சேரி மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் உள்ளார். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ படித்துள்ளார். கடந்த 2013-ல் அதிமுகவில் இணைந்த இவர் முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT