Published : 21 Mar 2024 03:43 PM
Last Updated : 21 Mar 2024 03:43 PM
புதுடெல்லி: "பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க ஆளுநர் ரவிக்கு நாளை வரை (வெள்ளிக்கிழமை) அவகாசம். இல்லையென்றால், நாங்கள் அதை இப்போது சொல்லப் போவதில்லை" என்று கூறி உச்ச நீதிமன்றம் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. மனுவில், "தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ரவி முயற்சிக்கிறார். அரசியல் சாசனத்தில் 164 (1) பிரிவை ஆளுநர் ரவி அப்பட்டமாக மீறுகிறார்.
முதல்வர் பரிந்துரைந்த பின்பும் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்து வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கை தவறானது. சட்டத்துக்கு புறம்பானது. உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி பொன்முடிக்கு எம்எல்ஏ பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அமைச்சரவை பதவி வழங்க அரசு பரிந்துரைத்தும் ஆளுநர் அதை செயல்படுத்த மறுக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை அவசர வழக்காக விசாரிக்கை வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரணை செய்தது.
விசாரணையின்போது, "ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து நாங்கள் தீவிர கவலை கொண்டுள்ளோம். ஆளுநர் ரவி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளார். பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று சொல்வது அவருடைய வேலை அல்ல.
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என எப்படி கூறமுடியும். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்.
நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவில்லை. ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அரசியல் சாசனத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளுநர் ரவி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஆளுநருக்கு அறிவுரை சொல்பவர்கள் தகுந்த அறிவுரைகளை சொல்வதில்லை. அரசியல் சாசனத்தை ஆளுநர் பின்பற்றவில்லை என்றால் மாநில அரசு என்ன செய்யும். அரசியல் சாசனப்படி ஆளுநர் செயல்படுகிறாரா என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க ஆளுநர் ரவிக்கு நாளை வரை அவகாசம். இல்லையென்றால், நாங்கள் அதை இப்போது சொல்லப் போவதில்லை. ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்டு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஆளுநருக்கு எதிராக கடுமையாக கேள்விகளை எழுப்பியது.
முன்னதாக, "ஒருவருக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்காத காரணத்தினாலேயே அவருக்கான அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதாக கருதக் கூடாது" என்று ஆளுநர் தரப்பு இந்த வழக்கில் வாதத்தை முன்வைத்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "அரசியல் சாசனப்படி ஆளுநர்கள் செயல்படுவதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது" என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT