Published : 21 Mar 2024 02:43 PM
Last Updated : 21 Mar 2024 02:43 PM
ராமநாதபுரம்: திமுக கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக தற்போது எம்பியாக உள்ள நவாஸ் கனியே மீண்டும் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ராமநாதபுரம் உள்ளிட்ட 21 தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார்.
திருச்சுழியை சேர்ந்தவர்: அதில் ராமநாதபுரம் தொகுதிக்கு விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் பா.ஜெய பெருமாள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ராமநாதபுரம் தொகுதியில் இடம் பெற்றுள்ள திருச்சுழி சட்டப் பேரவை தொகுதியைச் சேர்ந்தவர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, மணிகண்டன், மாவட்டச் செயலாளர் முனியசாமி, மாவட்டச் செயலாளரின் மனைவியும், மாநில மகளிரணி இணைச் செயலாளருமான கீர்த்திகா போன்றோர் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
106 பேர் விருப்ப மனு: அதே நேரம், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 106 பேர் கட்சி தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளனர். வேட்பாளர் ஜெயபெருமாளின் அண்ணன் மதுரை திமுக பிரமுகர் அக்ரி கணேசன் ஆவார். அதேபோல் மற்றொரு அண்ணன் ஐஏஎஸ் அதிகாரியான பொன்னையா ஊரக வளர்ச்சித்துறை ஆணையராக உள்ளார். இவர்களது தந்தை பால்ச்சாமி அருப்புக்கோட்டை தொகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டுள்ளார். அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் வேட்பாளர் ஜெய பெருமாள். விருதுநகரில் ஒரு முறை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
பழனிசாமி திட்டம்: ஜெயபெருமாளின் பூர்வீகம் முதுகுளத்தூர் அருகேயுள்ள புளியங்குடி கிராமம் ஆகும். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதியில் அதிக செல்வாக்கு உள்ளது என்பதாலும், அதே சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையே வேட்பாளராக களமிறக்கி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டு ஜெயபெருமாளை நிறுத்தியுள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT