Published : 21 Mar 2024 10:54 AM
Last Updated : 21 Mar 2024 10:54 AM
தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் மீதியுள்ள 19 தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 33 தொகுதிகளில் அதிமுக தங்கள் கட்சி வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளது. திமுக 21 தொகுதிகளிலும், அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட்டாலும், இந்த 2 கட்சிகளும் 18 தொகுதிகளில் நேரடியாக மோதிக் கொள்கின்றன.
நேரடி போட்டி நிலவும் தொகுதிகள் வருமாறு: வடசென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி) கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி.
திமுக, போட்டியிடும் மற்ற 3 தொகுதிகளில் மத்திய சென்னை, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர்களுக்கு எதிராகவும், தென்காசி (தனி) தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு எதிராகவும் களம் காண்கிறது.
அதேபோல் அதிமுக தாங்கள் போட்டியிடும் 33 தொகுதிகளில் திமுகவோடு நேரடியாக மோதும் 18 தொகுதிகள் தவிர, அதன் கூட்டணி கட்சிகளை எதிர்த்து 15 இடங்களில் போட்டியி டுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மதுரையிலும், விசிகவுக்கு எதிராக விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி) ஆகிய தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள்.
மதிமுகவுக்கு எதிராக திருச்சியிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு எதிராக ராமநாதபுரத்திலும், கொமதேகவுக்கு எதிராக நாமக்கல் தொகுதியிலும் அதிமுக போட்டியிடுகிறது.
சில தொகுதிகளில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே களத்தில் இல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் மோதிக் கொள்கின்றன. குறிப்பாக திருவள்ளூர் (தனி), கடலூர், விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், தேமுதிகவும் மோதிக் கொள்கின்றன. அதேபோல் திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், எஸ்.டி.பி.ஐ. கட்சியும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...