Last Updated : 21 Mar, 2024 10:40 AM

 

Published : 21 Mar 2024 10:40 AM
Last Updated : 21 Mar 2024 10:40 AM

வேட்பாளர் அறிவிப்புக்காக காத்திருக்கும் புதுச்சேரி அரசியல் கட்சிகள்: தாமதம் ஏன்?

வைத்திலிங்கம் (இடது), நமச்சிவாயம் (வலது)

புதுச்சேரி: மக்களவை தேர்தலுக்கு குறுகியகால அவகாசமே இருப்பதால் தேர்தல் பணிகளை புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள் விரைவுபடுத்தியுள்ளன. அதேநேரத்தில் வேட்பாளர் அறிவிப்புக்காக கட்சித் தலைமையை நோக்கி இங்குள்ள பாஜக, காங்கிரஸ், அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

2024 மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்டமாக தமிழகம், புதுவையில் தேர்தல் நடக்கவுள்ளது. புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி, இண்டியா கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி என மூன்று கூட்டணி வேட்பாளர்கள் தேர்தலில் மோதவுள்ளனர். முக்கியமாக மும்முனை போட்டி உருவாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவும், இண்டியா கூட்டணியில் காங்கிரஸுக்கும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் அதிமுகதான் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.

புதுச்சேரியைப் பொருத்தவரை பாஜக, காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமைதான் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். பாஜக, காங்கிரஸ், அதிமுக கட்சிகளில் இதுவரை வேட்பாளர்கள் யார் என அறிவிக்கவில்லை. பாஜகவில் யார் வேட்பாளர் என்று தினமும் ஒருவர் பெயர் வெளியாகி பேசுபொருளாகி வருகிறது.

உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் போட்டியிடவே முதல்வர் ரங்கசாமி தொடங்கி கட்சி நிர்வாகிகள் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நமச்சிவாயம் தயக்கம் காட்டுவதால் வேட்பாளர் அறிவிப்பில் தாமதமாகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸில் தற்போதைய எம்பி வைத்திலிங்கம் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அவர் கூட்டணி கட்சி அலுவலகங்களுக்கு சென்று காங்கிரஸுக்கு தொகுதியை ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்து வருகிறார். வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. தற்போது ஒரு மாதம் மட்டுமே தேர்தலுக்கு உள்ளது.

இதுபற்றி முக்கிய அரசியல் கட்சிகளின் வட்டாரங்களில் விசாரித்தபோது, “புதுச்சேரியைப் பொருத்தவரை பாஜக, காங்கிரஸுக்கு டெல்லி தலைமையும், அதிமுகவுக்கு சென்னை தலைமையும்தான் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். அவர்கள் வேட்பாளரை அறிவித்த பின் தேர்தலுக்கு வேட்பாளர் தயாராக வேண்டும். போட்டியிடும் வேட்பாளர்கள் வரி பாக்கி ஏதுமில்லை என சான்றிதழ் பெற வேண்டும். மேலும் பல பணிகள் உள்ளன.

புதுச்சேரியில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதில் புதுச்சேரியில் 23 தொகுதிகளும், காரைக்காலில் 5 தொகுதிகளும் ஆந்திரம் அருகேயுள்ள ஏனாம், கேரளம் அருகேயுள்ள மாஹேயில் தலா ஒரு தொகுதிகள் உள்ளன. அதனுடன், தேர்தலுக்கு நிர்வாகிகள், தொண்டர்களை தயார்படுத்த தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டம், பூத் கமிட்டி கூட்டம் ஆகியவற்றை நடத்த வேண்டும். ஒவ்வொரு பிராந்தியமும் பல நூறு கிமீ தொலைவு பயணிக்க வேண்டும்.

ஆனால், அதற்கு குறைந்த கால அவகாசம்தான் உள்ளது. இதனால் பணிகளை விரைவுப்படுத்த தொடங்கியுள்ளோம். கட்சித் தலைமையிடம் இருந்து வேட்பாளர் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். அத்துடன் முக்கியத் தலைவர்கள் பிரச்சாரத்து வருகை தருவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். தேர்தல் பணிக்கான முனைப்பில் இருந்தாலும் தலைமை உத்தரவு எப்போது வரும் எனத் தெரியவில்லை." என்றனர்.

வேட்புமனு தாக்கலின் முதல் நாளான நேற்று புதுச்சேரியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களைத் தவிர்த்து இன்றுடன் சேர்ந்து ஐந்து நாட்கள் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்ய இயலும் சூழல் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x