Published : 27 Feb 2018 08:48 AM
Last Updated : 27 Feb 2018 08:48 AM

தீபாவளி அன்று பட்டாசுகளால் காற்று மாசு வசிக்க தகுதியற்ற நகரமாக சென்னை மாறியது: மாநகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்

பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதில் சென்னை மாநகரம் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. அதனால் தீபாவளியன்று வசிக்க தகுதியற்ற நகரமாக சென்னை மாறியுள்ளது.

பொதுவாக வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப் பணிகள், சாலைகளை முறையாக பராமரிக்காதது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை போன்ற காரணங்களால் காற்று மாசு ஏற்படுவது வழக்கம். இவை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசானது, மேற்கூறிய முறைகளில் ஏற்படும் காற்று மாசின் அளவை விட அதிகமாக உள்ளது. அதுவும் கடந்த ஆண்டு தீபாவளியின்போது கை கொடுக்கவில்லை. சென்னை சவுக்கார்பேட்டையில் அதிக அளவாக 777 மைக்ரோ கிராம் மாசு பதிவாகி யுள்ளது.

காற்றில் மிதக்கும் 10 மைக்ரோ கிராமுக்கும் குறைவான அளவுள்ள நுண்ணிய துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு உள்ளது என்பதன் அடிப்படையில் காற்று மாசு கணக்கிடப்படுகிறது. 10 மைக்ரோ கிராம் அளவுள்ள துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் 100 மைக்ரோ கிராம் வரை இடம்பெற்றிருப்பது, அனுமதிக்கப்பட்ட அளவாக உள்ளது.

சென்னையில் ஏற்பட்ட மிகை காற்று மாசுவால் தீபாவளி அன்று இரவு, பலர் சுவாசக் கோளாறு, தொண்டை எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். அந்த மாசு நுரையீரலில் தங்கி, புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

சராசரி கணக்கு காட்டிய தமிழகம்

இந்நிலையில் தேசிய அளவில் பல்வேறு நகரங்களில் தீபாவளி யின்போது பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட காற்று மாசு தொடர்பான அறிக்கையை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் உள்ள விவரங்களுடன் சென்னையில் பதிவான காற்று மாசுவை ஒப்பிடும்போது தீபாவளியின்போது அதிக காற்று மாசு ஏற்பட்ட நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

அதனால் தீபாவளி அன்று வசிக்க தகுதியற்ற நகரமாக சென்னை மாறியுள்ளது. இதை மறைக்கும் விதமாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமானது, சென்னையில் 5 இடங்களில் காற்று மாசு கணக்கிடப்பட்ட நிலையில் அவற்றின் சராசரியை, சென்னையில் பதிவான காற்று மாசுவாக தெரிவித்துள்ளது. ஆனால் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் எத்தனை இடங்களில் காற்று மாசு கணக்கிடப்பட்டதோ, அத்தனை இடங்களின் விவரங்களையும் தனித்தனியே வழங்கியுள்ளன.

மாநகராட்சி அலட்சியம்

தீபாவளி காற்று மாசு விவகாரத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மட்டும் நடத்திவிட்டு கடமையை முடித்துக்கொண்டது. மாசுவைக் குறைக்க எந்த கண் காணிப்பையும் மேற்கொள்ளவில்லை. மாநகராட்சி நிர்வாகத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் முடுக்கிவிடவில்லை.

இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, ``இந்த ஆண்டு பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், புகை இயற்கையாக சிதைவடையவில்லை. காற்று மாசு அதிகரித்ததற்கு அதுவும் ஒரு காரணம். வரும் ஆண்டுகளில் விழிப்புணர்வு முறையை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றனர்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன்னாள் நீதித்துறை உறுப்பினர் பி.ஜோதிமணி கூறும்போது, ``இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிப்பதையும், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதையும் தடுத்தாலே மாசு குறைந்துவிடும். கொல்கத்தாவில் பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் அளவைக் குறைத்ததால் அங்கு மாசு குறைந்துள்ளது. அதை தமிழகம் பின்பற்றலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x