Published : 21 Mar 2024 05:50 AM
Last Updated : 21 Mar 2024 05:50 AM
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு வாயில், வெளியேறும் பகுதிகளில் கட்டமைப்புகளுடன் சிறிய வகையிலான வணிக வளாகங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், 43 கி.மீ. சுரங்கப்பாதையில் 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. பல்வேறு இடங்களில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அமைய உள்ள சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு வாயில், வெளியேறும் பகுதிகள் அமையவுள்ள கட்டமைப்புகளில் சிறிய வகையிலான வணிக வளாகங்கள் உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பயணச்சீட்டு அல்லாத வருவாயை ஏற்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில் இதை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வணிக வளர்ச்சியின் ஒரு பகுதியாக இது இருக்கும்.
ஒவ்வொரு சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்தையும் அதன் நுழைவு வாயில்களையும் ஆய்வு செய்து வருகிறோம். நுழைவு வாயில் கட்டமைப்புக்கு மேலே வணிக இடத்தைக் கொண்டிருக்கும் நிலையங்களின் பட்டியலைத் தயார் செய்து வருகிறோம். சிறிய வகையிலான வணிக வளாகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு தவிர, வணிகரீதியாக ஆண்டுதோறும் ரூ.100 கோடி வரை வருவாய் ஈட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT