Published : 20 Mar 2024 10:51 PM
Last Updated : 20 Mar 2024 10:51 PM
சென்னை: டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம். அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், தேர்தல் ஆணையத்தில் தனக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017-ல் நடைபெற்ற ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தினகரன் போட்டியிட்டார். அப்போது அவருக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டது. சுமார் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை அவர் நிறுவினார். 2019 பொதுத்தேர்தலுக்கு அமமுக கட்சிக்கு வேறொரு சின்னம் ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் குக்கர் சின்னம் வழங்கப்பட்டது.
இந்த சூழலில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம். இந்த தேர்தலில் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக அங்கம் வகிக்கிறது. அந்த கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் புதன்கிழமை அன்று தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக தலைமை தொகுதிகளை அறிவித்த பின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT