Last Updated : 20 Mar, 2024 08:43 PM

1  

Published : 20 Mar 2024 08:43 PM
Last Updated : 20 Mar 2024 08:43 PM

“புதுச்சேரியில் வேட்பாளர்களை கண்டுபிடிக்க முடியாமல் பாஜக கூட்டணி திணறல்” - நாராயணசாமி

புதுச்சேரி: “வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாமல் 4 மாதங்களாக தடுமாறிக் கொண்டிருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.

இண்டியா கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையிலான நிர்வாகிகளை லப்போர்த் வீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.

கட்சி அலுவலகத்துக்கு வந்த அவர்களை அமைப்பாளர் சிவா மற்றும் அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து இரண்டு கட்சி நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் கலந்து பேசிக் கொண்டனர்.

இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியது: “என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆட்சியில் புதுச்சேரி மாநில மக்கள் அவதிபடுகின்றனர். சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கஞ்சா பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். நிலம், வீடு அபகரிப்பு நடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது இரட்டை எஞ்சின் ஆட்சி இருக்க வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சி, மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாரும், தேனாறும் ஓடும் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அவரால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை. அவர்களின் தேர்தல் அறிக்கையை எடுத்து பார்த்தால், 5 சவீதம் கூட நிறைவேற்றவில்லை.

புதுச்சேரி மாநிலத்தில் ரெஸ்டோ பார்களை திறந்து மதுகுடிக்கும் மாநிலமாக மாற்றிவிட்டனர். கஞ்சா மாநிலமாக ஆக்கிவிட்டனர். இவர்கள் ஆட்சியில் நீடித்தால் புதுச்சேரியின் வளர்ச்சி மட்டுமின்றி, இளைஞர் சமுதாயம் வீணாகிவிடும். அதற்கு முன்னோட்டமாக இந்த மக்களவை தேர்தல் இருக்கிறது. இந்த தேர்தலில் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருந்து வெற்றிக் கனியை பறிக்க வேண்டும். நாம் தொகுதிகளில் ஒருங்கணைந்து பாடுபட வேண்டும்.

பாமகவை கட்டாயப்படுத்தி பாஜக கூட்டணியில் சேர்த்துள்ளனர். அதிமுக கூட்டணி வருமா என்று கதவைத் திறந்து கொண்டு உட்காந்திருக்கின்றனர். நம்முடைய கூட்டணியை பொறுத்தவரையில் பலமான கூட்டணி. மக்கள் நலன் காக்கும் கூட்டணி. தொடர்ந்து பயணிக்கின்றோம்.

தமிழக முதல்வர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை பார்க்கும்போது இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும். மாநில உரிமை காக்கப்படும் என்று தெளிவாக கூறியுள்ளார். இதைத்தான் மத்தியில் ராகுல் காந்தி கூறியுள்ளார். ஆகவே நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். கருத்து வேறுபாடுகளை விட்டு இண்டியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாமல் 4 மாதங்களாக தடுமாறிக் கொண்டிருக்கும் என். ஆர்.காங்கிரஸ்-பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி பேசும்போது, “கடந்த 5 ஆண்டுகளில் மோசமான நாடாளுமன்றத்தை சந்தித்துள்ளேன். மறுபடியும் போக வேண்டும் என்று நினைப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் மோடியை எப்படியாவது அழிக்க வேண்டும் என்பதற்காவே திரும்பவும் போக வேண்டும் என்று நினைக்கின்றேன்.

ஜனநாயகத்தை முழுமையாக அழித்த கட்சி பாஜக தான். இன்றைய தினம் நாட்டை காக்க வேண்டும் என்றால் பாஜக இருக்கக்கூடாது. ஆட்சிக்கு வரக்கூடாது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால், மீண்டும் தேர்தல் நடக்குமா என்பதே பெரிய விஷயமாகிவிடும். சட்டம் உள்ளிட்ட அனைத்தையும் மாற்றும் அளவுக்கு அவர்களுக்கு மன தைரியமும், பண தைரியமும் இருக்கிறது. இதனை மாற்ற வேண்டும் என்றால் ஒரு சுதந்திர போராட்டத்தை போன்று போராட வேண்டும்.

குஜராத் மக்களை மயக்கத்தில் மோடி வைத்துள்ளார். அவர்கள் சிந்திக்கும் தன்மையில் இருக்கக்கூடாது என்ற நிலையில் அவர் இருக்கின்றார். அதைப்போலத்தான் தென்னிந்தியாவை அவர்கள் ஆள வேண்டும் என்று நினைக்கின்றனர். நிச்சயமாக தமிழகம், புதுச்சேரி அதனை ஏற்றுக்கொள்ளாது. தென்னிந்தியாவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளாது.

ஏனென்றால் இங்கு அதிகம் படித்தவர்கள், உழைப்பவர்கள், சிந்திக்கக்கூடியவர்கள் இருக்கின்றனர். ஆகவே நாம் இந்தியா முழுவதும் துடைத்தெறிய வேண்டிய கட்சியாக பாஜக உள்ளது. அதனை நாம் இந்நேரத்தில் செய்ய வேண்டும்” என்றார்.

திமுக மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா பேசும்போது, “புதுச்சேரி மக்களவை தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நாம் ஒற்றுமையாக இருந்து கடந்த முறை வாங்கிய வாக்குகளைவிட கூடுதலாக ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டும்.

கொள்ளையடித்த பணத்தை நம்பி பாஜக தேர்தல் களத்தில் நிற்கிறது. அதற்கு புதுச்சேரி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தோல்வி பயம் பிரதமர் மோடி கண்ணில் தெரிகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி மூன்றாண்டுகாலம் நடந்தும் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை என்பதால் அக்கட்சியில் இருப்பவர்கள் நிற்க பயந்து வேட்பாளரை தெரு, தெருவாக தேடும் நிலையில் உள்ளனர்.

இந்த தேர்தலில் திமுக பங்கு மிகப் பெரியதாக இருக்கும். கடந்த தேர்தலில் ஒன்றிணைந்த கூட்டணி இந்த தேர்தலிலும் தொடரக்கூடிய ஒரு அற்புதமான கட்டமைப்பு. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒரே சித்தாந்தத்தின் அடிப்படையில் இணைந்துள்ள கூட்டணி. இப்படிப்பட்ட கூட்டணியில் உள்ளவர்களுக்குள் மனசங்கடங்கள் இருந்தால் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஓரணியில் ஒற்றுமையாக வெற்றிக்கு பாடுபடுவோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x