Published : 20 Mar 2024 07:47 PM
Last Updated : 20 Mar 2024 07:47 PM
மதுரை: மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக நூதன முறையில் கையில் தூக்குக் கயிற்றுடன் வந்து சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிப்பதற்கும், பணம் கொடுத்து வாக்கு பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூக்குக் கயிறுடன் வேட்புமனு தாக்கல் செய்ததாக அவர் தெரிவித்தார்.
மதுரை மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் தொகுதியில் 2ஆவது சுயேச்சை வேட்பாளராக மதுரை செல்லூரை சேர்ந்த சமூக ஆர்வலரான சங்கரபாண்டியன் என்பவர் நூதன முறையில் தூக்கு கயிற்றில் டம்மி பணத்தை கட்டி தொங்கவிட்டவாறு வேட்புமனு தாக்கல் செய்த வந்தார்.
ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிப்பதற்கும், பணம் கொடுத்து வாக்கு பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தும், வாக்காளர்கள் பணம் பெற்று வாக்களிப்பது என்பது தூக்கு மாட்டிக்கொள்வது போன்றது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கையில் விழிப்புணர்வு வாசக பதாகையோடு வந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டி கையில் தூக்குக் கயிற்றைச் சுமந்தபடி வந்தார்.
அப்போது 100 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே காவல் துறையினர் அவரிடம் இருந்த கயிறு மற்றும் பதாகைகளை பறிமுதல் செய்த பின்னர் முழுவதுமாக சோதனை செய்த பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்தை அடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர் சங்கீதாவிடம் சுயேட்சை வேட்பாளர் சங்கரபாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மதுரை செல்லூர் பூந்தமல்லி நகர் பகுதியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் சங்கரபாண்டியன் டைல்ஸ் ஒட்டும். தொழிலில் ஈடுபட்டு வருவதோடு, நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் மக்கள் பொதுநல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவராக இருந்து வருகிறார்.
சங்கரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிப்பதற்கும், பணம் கொடுத்து வாக்கு பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தூக்குக் கயிற்றுடன் வேட்புமனு தாக்கல் செய்தேன்.
தேர்தல் என்பது அதிகாரம் உள்ளவர்களுக்கானது மட்டுமல்ல அனைவருக்குமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன், ஏற்கெனவே சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளேன்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT