Published : 20 Mar 2024 08:54 PM
Last Updated : 20 Mar 2024 08:54 PM

தந்தையின் நிழலாக வலம் வந்த அருண் நேரு... பெரம்பலூர் திமுக வேட்பாளர் ஆனது எப்படி?

பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு

திமுகவின் திருச்சியின் முகமாக அறியப்பட்டவர் அமைச்சர் கே.என்.நேரு. கால் நூற்றாண்டுக்கும் மேலாக திருச்சி மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். கருணாநிதி மறைவுக்கு பின் திமுகவின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட உள்ளூர் அரசியலில் இருந்து விடுபட்டு, சென்னையிலுள்ள அறிவாலயத்தில் இருந்தபடி கட்சிப் பணிகளை கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சென்னை பக்கம் பொறுப்பு இருந்தாலும் தனது ஆதரவாளர்கள் மூலம் திருச்சி அரசியலை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள கே.என்.நேரு முயன்றார். ஆனால், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

திருச்சியில் கே.என்.நேரு இல்லாமல் ஒரு போஸ்டரை பார்க்க முடியாது. ஆனால், 2020 பிப்ரவரியில் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த சிலர், கே.என்.நேருவின் புகைப்படத்தைத் தவிர்த்துவிட்டு மகேஷ் பொய்யாமொழியின் படத்துடன் கூடிய போஸ்டரை தில்லை நகரிலுள்ள திமுக அலுவலகத்தின் அருகில் ஒட்டி அதிரடி காண்பித்தனர். தொடர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகிகளில் பலர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களாக இருப்பதால் அவர்களை விட்டுவிட்டு, இளைஞர்களை தங்கள் பக்கம் இழுப்பதில் அன்பில் மகேஸ் தரப்பினர் தீவிரமாக செயல்பட்டனர்.

அப்போதே கே.என்.நேரு விசுவாசிகள் அவரின் மகன் அருண் நேருவை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். எதற்கு பதில் சொல்லாமல் கடந்தார் நேரு. இப்படியாக மௌன மோதல் முற்றிய நேரத்தில் தான் 2020 ஜன.30-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற திமுகவின் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாநாட்டில் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் முதல் என்ட்ரி அமைந்தது.

முதன்முதலாக அரசியல் மேடையில் ஏறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் காலில் விழுந்து ஆசி பெற்ற அருண் நேரு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து கைகுலுக்கிப் பேசினார். கட்சி நிகழ்ச்சிகளில் வெளிப்படையாக பங்கேற்பதை தவிர்த்து வந்த அருண் நேரு முதன்முதலாக இந்த மாநாட்டு மேடையில் தோன்றியது திமுகவினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சென்னையில் ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனம் நடத்திவரும் அருண் நேரு, இதன்பின் திமுக அலுவலகத்துக்கு வருவது, திமுக பிரமுகர்களின் இல்ல விழாக்களில் பங்கேற்க செல்வது என மெல்ல மெல்ல லைனுக்குள் வரத் தொடங்கினார்.

இதற்கிடையே, திமுக ஆட்சி அமைத்தது. திருச்சி மாவட்டத்துக்கு வழக்கம்போல் ஒரு அமைச்சர் கிடைப்பார் என்றே நினைக்கப்பட்டது. அதன்படி, சீனியரான கே.என்.நேரு நகராட்சி நிர்வாகத் துறையை பெற்று அமைச்சரானார். ஆனால் ட்விஸ்டாக ஸ்டாலின் குடும்பத்துடனான நெருக்கம், உதயநிதியின் உற்ற நட்பு ஆகியவை அன்பில் மகேஸ் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக்கியது. கே.என்.நேருவுக்கு போட்டியாக அன்பில் மகேஸ் களமிறக்கப்பட்டதாகவே இதனை பார்க்க முடிந்தது. இது திருச்சியில் கே.என்.நேருவுக்கு அடுத்து திமுகவின் முகம் அன்பில் மகேஸ் என்ற பேச்சாக மாறியது.

இருவரும் அமைச்சர்கள் ஆன பிறகு மோதல் திரைமறைவில் நடக்கத் தொடங்கியது. இந்த நிலையில்தான் தன் மகனை அரசியலில் இறக்க திட்டமிட்டார் கே.என்.நேரு. 2021-ம் ஆண்டு கே.என்.நேருவின் மகன் அருண் நேரு கட்சியில் இணைந்தார். எந்தப் பொறுப்புகளிலும் அவர் இல்லை என்றாலும், அருண் நேரு படங்கள் எல்லா போஸ்டர்களிலும் 'வருங்காலமே...' என்ற அடைமொழியில் இடம்பெற்றது.

திருச்சியின் முகங்களாக திருச்சி சிவா, நேரு, அன்பின் மகேஸ் என ஒரு பெரியே லிஸ்டே இருக்கிறது. இந்த நிலையில், அதில் கூடுதலாக இணைத்தார் அருண். ஏற்கெனவே, திருச்சி சிவாவுக்கும் நேருவுக்கும் மோதல் போக்கு முற்றியது. இதனால், லோக்கல் பாலிடிக்ஸில் சிவாவை சைலென்ட் செய்ய, அவர் தேசிய அரசியலுக்குத் தள்ளப்பட்டார்.

அடுத்ததாக, தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த நேருவுக்கு அன்பில் மகேஸ் வருகை சற்றே அதிர்ச்சியானது. குறிப்பாக, இருவரும் லோக்கல் அரசியலில் செயல்படுகின்றனர். இதைத் தவிர்க்க தன் மகனை வளர்த்துவிட நேரு நினைத்தார். ஆனால், அன்பில் மகேஸ் அடுத்த தலைமுறை தலைவர்களில் முக்கியமான நபராக வளம் வருகிறார். உதயநிதியிடம் நெருக்கமாக இருக்கிறார். எனவே, நேருவையும் அன்பிலையும் சரிகட்ட, இரண்டு அமைச்சர்கள் லோக்கலுக்குப் போதும், அருணுக்கு தேசிய அரசியல்தான் சரி என ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

கே.என்.நேரு மகன் அமைச்சரான பின் திருச்சியில் அவர் செய்ய வேண்டிய கட்சி, நிர்வாகப் பணிகளை அருண் நேருவே தந்தையின் 'நிழலாக' நின்று செயல்படுத்தினார். அரசு மட்டத்தில் இவர் விழாவில் பங்கேற்றது ஒரு முறை சர்ச்சையானது. கட்சியில் எந்த பொறுப்பும் கிடைக்காவிட்டாலும், நாடாளுமன்றத் தேர்தலில் மகன் அருணை வேட்பாளராக்க முயன்றார் கே.என்.நேரு. கட்சி தலைமையிடம் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியைத் தன் மகனுக்கு கொடுக்க நேரு கோரிக்கை வைத்தார். இந்தப் பிளானுக்கு தலைமை சம்மந்தித்துள்ளது. அதன்படி அருண் நேரு பெரம்பலூர் தொகுதியின் திமுக வேட்பாளராக இன்று அதிகார்பூரமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அருண் நேரு, அமெரிக்காவில் உள்ள பிரபல ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கட்டட மேலாண்மை (எம்.எஸ்) படிப்பை முடித்தவர். எனினும், தந்தையின் விவசாயம் மற்றும் அரிசி ஆலை நிர்வாகம் உள்ளிட்ட தொழில்களைக் கவனித்த வந்த அருண் நேரு இப்போது திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் நான்கு திருச்சி மாவட்டத்தின் கீழ் வருகிறது. அமைச்சர் நேருவின் சொந்த ஊரான லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் என்பதால், அருண் தரப்புக்கு பெரும்பாலும் பழக்கமான களமாகவே அது இருக்கும்.

2019 தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு பெரம்பலூர் தொகுதியில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டிஆர் பாரிவேந்தர், தற்போது பாஜக கூட்டணியில் இணைந்து பெரம்பலூரை கைவசப்படுத்த காத்திருக்கிறார். இவர் அருணுக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும்.

ஆனால், "பாரிவேந்தர் தொகுதியில் பரவலாக அறியப்பட்டவர் என்பது உண்மைதான். ஆனால் வெற்றிக்காக கடுமையாக உழைப்பேன். இந்த வாய்ப்பை ஒரு பெரிய பொறுப்பாக நான் பார்க்கிறேன். வாரிசு அரசியல் என்று என்னை முத்திரை குத்துவது எனக்கு தெரியும். ஆனால், கடின உழைப்பின் மூலம் என்னை நிரூபிக்க வேண்டும். நான் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதால், நான் திறந்த மனதுடன் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x