Published : 20 Mar 2024 06:45 PM
Last Updated : 20 Mar 2024 06:45 PM
2024 மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், 11 பேருக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறினார். அதில், சிட்டிங் எம்.பி.க்களாக பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், சிட்டிங் எம்.பி.க்கள் 6 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. காரணம் என்ன?
சீட் மறுக்கப்பட்டவர்கள்:
பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்
தென்காசி - தனுஷ் குமார்
தஞ்சை - பழனிமாணிக்கம்
சேலம் - பார்த்திபன்
கள்ளக்குறிச்சி - கவுதம சிகாமணி
தருமபுரி - செந்தில்குமார்
கள்ளக்குறிச்சி - கவுதம சிகாமணி: கடந்த மக்களவைத் தேர்தலில் முன்னாள் அமைச்சரான பொன்முடி மகன் கவுதம சிகாமணி. கடந்த முறை கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியாக வெற்றி பெற்ற கவுதம் சிகாமணிக்கு பதில் அந்த தொகுதி மலையரசன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கவுதம சிகாமணியின் செயல்பாடுகள் தொகுதியில் மிகவும் மோசமாக இருந்தது சர்வே முடிவில் தெரியவந்தது. அவர் அமலாக்கத் துறை விசாரணை சந்தித்து வருவதும் சீட் மறுக்கப்பட்டதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
தென்காசி - தனுஷ்குமார்: தென்காசி தனித் தொகுதியில் இருந்து கடந்த முறை தனுஷ் குமார் வெற்றி பெற்றார். திமுக இளைஞரணியில் உள்ள தனுஷ், அமைச்சர் உதயநிதி பெயரை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கூறி தன்னை உதயநிதியின் ஆதரவாளராகக் காட்டிக்கொண்டார். இம்முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இத்தொகுதி ராணி என்ற பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியதன் பின்னணியில் டாக்டர் ராணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்: பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரத்துக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஈஸ்வரசாமி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அங்கும் அவரின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை என்பதால் தொகுதி மாற்றப்பட்டுள்ளது.
தஞ்சை - பழனிமாணிக்கம்: 6 முறை எம்.பியாக இருந்தவர் பழனிமாணிக்கம். அவருக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தத் தொகுதியில் அவரின் செயல்பாடுகள் சர்வேயில் அடிவாங்கியது சீட் மறுக்கப்பட்டதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், புதிதாக நிறுத்தப்படும் வேட்பாளர் முரசொலி பாரம்பரியமான திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். அன்பில் மகேஸுக்கு நெருக்கமானவரும் கூட, இப்படியாக தலைமைக்கு நெருக்கமானவர், புதியவர்களுக்கு வாய்ப்பு என்னும் அடிப்படையில் இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சேலம் பார்த்திபன்: சேலம் தொகுதியில் பார்த்திபனுக்குப் பதிலாக செல்வ கணபதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல நாட்களாகவே இந்தத் தொகுதிக்கு செல்வகணபதியின் பெயர் அடிபட்டது. அதன்படி அவரை வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது திமுக .
தருமபுரி - செந்தில்குமார்: மக்களவையில் ‘கோமுத்ரா மாநிலங்கள்’ என செந்தில்குமார் பேசியது இந்திய அளவில் சர்ச்சையாக வெடித்தது. மேலும், அரசு திட்டத்தின் பூமி பூஜையில் ஏன் அனைத்து கடவுள் புகைப்படங்களும் இல்லை என அவர் பேசியதும் சர்ச்சையானது. இப்படியாக, அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்த செந்தில்குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT