Published : 20 Mar 2024 05:58 PM
Last Updated : 20 Mar 2024 05:58 PM

அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 தொகுதிகளில் போட்டி: இபிஎஸ் - பிரேமலதா கையெழுத்து

சென்னை: அதிமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் இபிஎஸ் மற்றும் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, "முதன்முதலாக அதிமுக அலுவலகத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்ந்த இடம் இது. 2011ல் ஏற்பட்ட வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. 2011ல் கிடைத்த வெற்றிபோல் இப்போதும் மீண்டும் கிடைக்கும். 2026-ம் ஆண்டிலும் இந்தக் கூட்டணி நிச்சயம் தொடரும்.

நாளை நல்ல செய்தி தேமுதிக அலுவலகத்தில் அறிவிக்கப்படும். தேமுதிக அலுவலகத்துக்கு எடப்பாடி வரவுள்ளார். நாளைக்கு மிகப் பெரிய செய்தியை அறிவிப்போம். தேர்தல் என்றால் பலமுனை போட்டி வரும். பல தேர்தலை சந்தித்துள்ளது அதிமுகவும், தேமுதிகவும். எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. யார் யார் கூட்டணி சேர்க்கிறார்கள் என்பது தான் முக்கியம். இந்தக் கூட்டணி இயற்கையான கூட்டணி.

அதிமுக, தேமுதிக எல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தவர்கள்தான். ஆனால், இம்முறை எங்கள் கட்சி நிர்வாகிகள் அதிமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என விரும்பினர். மேலும் முதலில் எங்களை அணுகியது அதிமுகதான். தேர்தல் என்பதால் பலர் போட்டியிடத்தான் செய்வார்கள். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எனது வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.

பின்னணி: தேமுதிகவின் செயற்குழு கூட்டத்தில் 14 தொகுதிகளை + 1 ராஜ்ய சபா சீட் யார் ஒதுக்குகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி அமைப்போம் எனப் புயலைக் கிளப்பினார் பிரமலதா விஜயகாந்த். குறிப்பாக, கடந்த 2014-ம் ஆண்டில் போட்டியிட்ட தொகுதி எண்ணிக்கைதான் இவை. இருந்தாலும், அப்போது இருந்த காட்சிகள், இல்லை, கட்சியின் வலிமை ஏற்றாற்போல் தொகுதிகளைக் கேட்க வேண்டுமென விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால், நிர்வாகிகளின் ஆசையைத்தான் பேசினேன் எனப் பின்வாங்கினார்.

தேமுதிகவைத் தங்கள் பக்கம் இழுக்க பாஜக தொடக்கம் முதலே காய்களை நகர்த்தி வந்தனர். விஜயகாந்துக்கு பத்ம விருது கொடுக்கப்பட்டதை பிரேமலதா வரவேற்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், காலம் கடந்து அறிவிப்பு என வருத்தம்தான் தெரிவித்தார். இதனால், ‘பாஜக முன்வைத்த அனைத்து அழைப்புகளையும் பிரேமலதா நிராகரித்துவிட்டார்' என சொல்லப்பட்டது.

பின்னர் மக்களவை தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது தேமுதிக. பத்து தொகுதிகளில் ஆரம்பித்து, ஏழு தொகுதிகளில் இழுபறி நீடித்து, பின்னர் நான்கு மக்களவை தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை சீட்டும் தேமுதிக கேட்டு வந்தது. எனினும் மாநிலங்களவை சீட் ஒதுக்க அதிமுக தயக்கம் காட்டுகிறது என்றும், அந்த சீட்களை அதிமுக வசம் வைத்துக்கொள்ள விரும்புகிறது என்றும் தகவல் வெளியானது. இதனால், அதிமுக - தேதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை மூன்று கட்டங்களாக நீடித்தும் இறுதி அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில், இன்று காலை அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது ஒப்பந்தம் கையெழுத்தானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x