Published : 20 Mar 2024 01:30 PM
Last Updated : 20 Mar 2024 01:30 PM
சென்னை: “நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இங்கிருக்கும் ஆளுநர் ஒருவரே போதும். திமுகவுக்கு நன்றாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று. இப்போது பிரதமரும் எங்களுக்காக நன்றாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். பிரதமரும், ஆளுநரும் மீண்டும் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தருவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கை மற்றும் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் முதல்வர் ஸ்டாலின். அதன் விவரம்... பிரதமர் அடிக்கடி இங்கு வருகிறார். திமுகவுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது என்ற விமர்சனத்தை வைத்துவிட்டுச் செல்கிறாரே?
யாருக்குக் காய்ச்சல் வந்திருக்கிறது என்று, எங்களுடைய பொருளாளர் பாலு அவர்கள் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார். அதனால் அதிகம் நான் விளக்க விரும்பவில்லை. எனவே, தோல்வி பயம் வந்த காரணத்தினால் அடிக்கடி வர வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. வரட்டும், வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், இப்போது தேர்தல் நேரத்தில் வரும் பிரதமர், தமிழ்நாட்டில் மழை, வெள்ளம் வந்தபோது, சோதனை ஏற்பட்டபோது, வந்திருந்து மக்களுக்கு ஆறுதல் சொல்லியிருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
திமுக தலைமையிலான இந்த இண்டியா கூட்டணி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குக் கேட்கப்பட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று கருத்து ஒன்று அடிபடுகிறது? மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொதுத் தொகுதியானது கேட்கப்பட்டது. அதை ஏன் திமுக கொடுக்க முன்வரவில்லை?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரைக்கும், அவர்கள் கேட்பதற்கு உரிமை உண்டு. அதற்காகத்தான் ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவில் பேசி அதில் விவாதித்து அவர்களே திருப்தி அடைந்து அதற்கு பிறகு அவரே அதற்கு விளக்கமும் சொல்லிவிட்டார். அதனால் அதற்கு மேற்கொண்டு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், அது அகில இந்திய அளவில் இருக்கும் கட்சி. அதனால், மற்ற மாநிலங்கள் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் சரி செய்துவிட்டு, தமிழகத்தில் இருக்கும் கூட்டணியோடு பேசுவதற்குக் கொஞ்சம் காலதாமதமானது. அதையும் சுமுகமாகத்தான் முடித்திருக்கிறேன் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இரண்டு பேரிடமும் உட்கார்ந்து, ஆற அமரப் பேசிப் பொறுமையாகத்தான் முடித்து இருக்கிறோமே தவிர, அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு கோபதாபம் ஏற்பட்டு முடித்து விட்டதாக நினைக்க வேண்டிய அவசியமே இல்லை.
பாஜக தமிழகத்தில் தொடர்ச்சியாக வளர்ந்து வருகிறது என்று ஒரு கட்டமைப்பை உருவாக்கி வருகிறார்கள். அது உண்மையா?
நீங்களே உண்மையா என்று கேட்கிறீர்கள். அதற்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்.
புதிய முகங்களுக்கு, அதுவும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். பொதுவாகவே இந்த முறை திமுகவை எல்லோருமே கார்னர் செய்து பேசி வருகிறார்கள். இதுவரை உங்களோடு இருந்தவர்களும் சரி, இப்போது அதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
அதை எங்களுடைய பிரச்சாரத்தின் மூலமாக நாங்கள் எதிர்கொள்ள இருக்கிறோம். நாங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இங்கிருக்கும் ஆளுநர் ஒருவரே போதும். திமுகவுக்கு நன்றாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று. அதேபோல, இப்போது பிரதமரே போதும். அவரே எங்களுக்கு நன்றாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். எனவே இரண்டு பேரும் சேர்ந்தே மீண்டும் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தருவதற்கான வாய்ப்பை அவர்களே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை.
தொடர்ந்து பிரதமர் வந்து பேசும்போது, வாரிசு அரசியல் தலை தூக்கி இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை ஒழிக்க பாடுபடுவோம் என்று பிரச்சாரத்தில் சொல்கிறார். அந்தப் பிரச்சாரத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இது குடும்பக் கட்சிதான். திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒரு குடும்பப் பாச உணர்வோடு, கருணாநிதியும், அண்ணாவும் தொடங்கி வைத்திருக்கிறார்கள். உழைப்பின் அடிப்படையில்தான் பொறுப்புகளும், பல பணிகளும் கொடுக்கப்படுகிறதே தவிர, வாரிசு அடிப்படையில் கொடுக்கப்படுவது அல்ல.
திமுகவின் தேர்தல் அறிக்கை எப்போதுமே பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் அமைந்திருக்கும். அதற்கான வரலாறு உண்டு. தற்போது வெளியிட்டிருக்கும் இந்தத் தேர்தல் அறிக்கையும் பிற மாநிலங்களின் பின்பற்றும் வகையில் அமைந்திருக்குமா? அவ்வாறு அமைந்திருக்கும் என்றால், அதில் என்ன முக்கிய அம்சமாக நீங்கள் பார்க்கிறீர்கள்?
நான் சுருக்கமாகத்தான் படித்து சொல்லி இருக்கிறேன். இங்கே முழுவதுமாகப் படிக்க நேரமில்லை. அதைப் படித்து பாருங்கள். அதில் நீங்கள் கேட்கும் அம்சம் அத்தனையும் இருக்கும்.
அதிமுக கூட்டணி தற்போது வரையிலும் முடிவு செய்யப்படாமல் இருக்கிறது. திமுக கூட்டணி அனைத்தையும் முடிவு செய்து, எல்லா வேலைகளையும் முடித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக இரண்டாம் இடத்தை பிடிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. எப்படி இருக்கும் களம்?
அதிமுக தேர்தல் கூட்டணி முடிவாகாமல் இருப்பதற்கு நாங்கள் காரணம் அல்ல. எங்கள் கூட்டணியை நாங்கள் முடித்து விட்டோம். பாஜக வளர்ந்து வருகிறது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு தெரியும். யார் வளர்ந்திருக்கிறார்கள்? யார் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்? யார் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்? யார் நோட்டாவைவிடக் குறைவாக வாக்கு வாங்குகிறார்கள்? என்பது தெரியப்போகிறது.
நீங்கள் கொடுத்திருக்கும் அறிக்கையில் உள்ள பல தகவல்களை பார்க்கும்போது, மத்திய அரசின் திட்டங்கள் மாதிரி இருக்கிறது. இதை இண்டியா கூட்டணிக்கு மொத்தமாக நீங்கள் கொடுத்திருக்கிறீர்களா? இல்லை திமுகவுக்காக கொடுத்திருக்கிறீர்களா?
எங்கள் கூட்டணிதானே ஆட்சிக்கு வரப்போகிறது. அந்த தைரியத்தில்தான் கொடுத்திருக்கிறோம்.
உங்கள் மனதின்படி பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவீர்கள்?
இந்தியாதான் கூட்டணியின் வேட்பாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT