Published : 20 Mar 2024 12:37 PM
Last Updated : 20 Mar 2024 12:37 PM
நாமக்கல்: காந்தி போல் வேடம் அணிந்து டெபாசிட் தொகையான 25 ஆயிரத்தை பத்து ரூபாய் நாணயங்களாக மாற்றி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நபரால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ். இவர் காந்தி போல் வேடம் அணிந்து தொடர்ந்து சமூக நல பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 20) முதல் தொடங்கியுள்ளது. இதையொட்டி காந்தி போல் வேடம் அணிந்து வந்த ரமேஷ் டெபாசிட் தொகையான ரூ. 25 ஆயிரத்தை பத்து ரூபாய் நாணயங்களாக மாற்றி தோளில் சுமந்தபடி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட தேர்தல் அலுவலர் ச. உமாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக பத்து ரூபாய் நாணயங்களை சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் அலுவலர்கள் அதனை கணக்கிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்து ரூபாய் நோட்டு நாணயங்களை வேட்பு மனு தாக்கல் செய்ய கொண்டு வந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT