Published : 20 Mar 2024 11:08 AM
Last Updated : 20 Mar 2024 11:08 AM
சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் புதிய வேட்பாளர்களாக 11 பேர் அறிவிக்கபட்டுள்ளனர்.
தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கியுள்ளது.
முதன்முதலாக கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கிய திமுக, கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடங்களை ஒதுக்கி தொகுதி பங்கீட்டையும் முதலில் நிறைவு செய்தது. திமுகவை பொருத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக களம்காண்கிறது.
திமுக கூட்டணியில் ஏற்கெனவே விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள், ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் மற்றும் மதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததன் மூலம் திமுக நேரடியாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இன்று திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை ஸ்டாலின் அறிவித்தார்.
11 புதுமுகங்கள்: புதிய வேட்பாளர்களாக 11 பேர் அறிவிக்கபட்டுள்ளனர். 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேட்பாளர்கள் பட்டியலில் 6 வழக்கறிஞர்கள், 2 முனைவர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 2 மருத்துவர்கள், 19 பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
வாரிசுகள் அடிப்படையில் பார்த்தால் எதிர்பார்க்கப்பட்டதுபோலவே அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், தவிர கனிமொழி, கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT