Last Updated : 08 Feb, 2018 07:03 AM

 

Published : 08 Feb 2018 07:03 AM
Last Updated : 08 Feb 2018 07:03 AM

தொடரும் கல்லூரி மாணவர்களின் மோதல்: பிள்ளைகளை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் - வழக்கு பதிவானால் தனியார் வேலைகூட கிடைக்காது என போலீஸார் எச்சரிக்கை

மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் அரசு வேலைக்கு மட்டும் அல்ல, தனியார் நிறுவனங்களில் கூட பணிக்குச் செல்ல முடியாது. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்தில் செல்லும் கல்லூரி மாணவர்கள், `எந்த கல்லூரி மாணவர்கள் உயர்ந்தவர்கள்’ என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

இரண்டு தினங்களுக்கு முன்னர், சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநில கல்லூரி மாணவர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பட்டரைவாக்கம் ரயில் நிலையம் சென்றபோது இருதரப்பு மாணவர்களும் அரிவாள், கத்தியுடன் மோதிக் கொண்டனர். இதில், 3 பேர் காயம் அடைந்தனர். இந்த விவகாரம் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோதல் தொடர்பாக தற்போது மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்கால வாழ்க்கை

மாணவர்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்டு விடக்கூடாது, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கவனத்தில்கொண்டு துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு (நுண்ணறிவுப் பிரிவு) தலைமையிலான போலீஸார் பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரிக்குச் சென்று மாணவர்களுக்கு நேரில் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் எம்.சி. சாரங்கன் கூறியதாவது:

``புத்தகங்கள் இருக்க வேண்டிய கைக ளில் அரிவாள், கத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. மாணவர்கள் மோதிக் கொள்வதற்கு பெரிய காரணம் இல்லை. எந்தக் கல்லூரி மாணவர்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவே பல நேரங்களில் மோதல் நடக்கிறது.

முன்பெல்லாம் மாணவர்களின் எதிர்காலம் கருதி எச்சரித்தும், எழுதி வாங்கிக் கொண்டும் அனுப்பி வைத்தோம். ஆனால், தற்போது மாணவர்கள் மிகவும் உக்கிரமாக மோதிக் கொள்கின்றனர். எங்களது அறிவுரைகளை அலட்சியப்படுத்துகின்றனர்.

இதயம் வலிக்கிறது

இதனால், வேறு வழியில்லாமல் கைது செய்கிறோம். ரவுடிகளைக் கைது செய்யும்போது மன நிறைவு ஏற்படும். ஆனால், மாணவர்களைக் கைது செய்யும்போது இதயம் வலிக்கிறது.

கத்தியால் குத்தினால்தான் குற்றம் என சில மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், பொது இடத்தில் கத்தியை அச்சுறுத்தும் வகையில் காண்பித்தாலே குற்றம் என பல மாணவர்களுக்கு தெரிவது இல்லை.

இதுகுறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி வருகிறோம். மேலும், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கல்லூரி நிர்வாகத்திடமும் இதுகுறித்து பேசியிருக்கிறோம்” என்றார்.

துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு கூறியதாவது:

“மாணவர்கள் தங்களைச் சாதனையாளர்களாக மாற்றிக் கொள்ளும் தளம் கல்லூரி. இதைப் புரிந்துகொண்டு முன்னேற்றப் பாதையில் மாணவர்கள் செல்ல வேண்டும்” என்றார்.

குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அரசு வேலை கிடைக்காது. தற்போது, தனியார் பணிக்குச் சென்றால்கூட தன் மீது எந்த வழக்கும் இல்லை என காவல் நிலையத்தில் நன்னடத்தைச் சான்றிதழ் பெற வேண்டிய நிலை உள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதில் கூட சிக்கல் உள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களோடு மக்களாக

மாணவர்கள் ரயிலில் மோதலில் ஈடு படுவதைத் தடுக்க சட்டம் ஒழுங்கு மற்றும் ரயில்வே போலீஸார் கூட்டாக கண் காணிப்புப் பணியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

முதல்கட்டமாக சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களில் கண்காணிப்புப் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபட உள்ளனர். அவர்கள் சாதாரண உடையில் மக்களோடு மக்களாக ரயிலில் பயணம் செய்ய உள்ளனர்.

மாநில கல்லூரி முதல்வர் பிரேமானந்த பெருமாள் கூறியதாவது:

"மாணவர்களின் திறனை வளர்க்க விநாடி - வினா உட்பட பல்வேறு போட்டிகளை நடத்தி உற்சாகப்படுத்துகிறோம். ஒழுக்கம் தொடர் பாகவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அடிக்கடி கூட்டம் நடத்துகிறோம். படிப்பில் ஆர்வம் இல்லாத ஒரு சில மாணவர்கள் இதுபோன்று மோதலில் ஈடுபடுகின்றனர். அவர்களை நல்வழிப் படுத்த, எதிர்காலம் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x