Published : 20 Mar 2024 12:25 AM
Last Updated : 20 Mar 2024 12:25 AM
தருமபுரி: தேர்தல் வெற்றிக்காக தமிழகத்தில் ஆளும் கட்சியால் அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தருமபுரியில் குற்றம்சாட்டினார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) மாலை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தருமபுரி வந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது.. “வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக-வுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி பணியாற்றும். திமுக கூட்டணி வேட்பாளர்களை தோல்வியடையச் செய்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்.
தருமபுரி மக்களவை உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார் இந்து மதத்தினரை தொடர்ந்து புண்படுத்தி வந்தார். தருமபுரி மாவட்ட தொழில் மற்றும் விவசாய வளர்ச்சிக்கோ, வேலைவாய்ப்புக்கோ அவர் எதுவும் செய்யவில்லை. மத அடிப்படையில் வாக்காளர்களின் மனநிலையை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம். மக்களவை தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும் திமுக-வுக்கு அரசு அலுவலர்கள் பலர் துணை போகின்றனர்.
தேர்தல் வெற்றிக்காக தமிழகத்தில் அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு ராணுவத்தை பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளது. அது குறித்து வாக்காளர்களிடம் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்வோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT