Published : 19 Mar 2024 07:34 PM
Last Updated : 19 Mar 2024 07:34 PM

மோடியின் சேலம் கூட்டம் ஹைலைட்ஸ் முதல் அண்ணாமலை Vs ஜெய்ராம் ரமேஷ் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 19, 2024

திமுக, இண்டியா கூட்டணி மீது பிரதமர் மோடி சரமாரி தாக்கு: சேலத்தில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “தமிழகத்தில் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, கன்னியாகுமரியில் சக்தி வழிபாட்டுத் தலம், சமயபுரம் மாரியம்மன் என சக்தி மிக்க தெய்வங்கள் அனைத்தும் பெண் வடிவத்தில், தமிழகத்தில் வழிபடுகின்றனர். சக்தி என்பதற்கு மிகப் பெரிய அர்த்தம் இருக்கிறது. ஆனால், இந்த காங்கிரஸ் திமுக கூட்டணி இந்த சக்தியின் வடிவத்தை ஆன்மிகத்தை, சனாதனத்தை அழித்துவிடுவதாக கூறி வருகின்றனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் இந்து மதத்தை அவமதித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்து மதத்துக்கு எதிராக அவர்கள் ஒரு கருத்தியலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்து தர்மத்தின் வழிபாட்டுக்குரிய சக்தியை அவர்கள் அழிக்க நினைக்கிறார்கள்” என்று சரமாரியாக சாடினார்.

மேலும், “திமுகவும் காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவர்கள் இருவருமே ஊழலையும், குடும்ப ஆட்சியையும் தொடர்ந்து நடத்துபவர்கள். அதனால்தான், காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகு, 5ஜி தொழில்நுட்பமே வளர்கிறது. தமிழகத்தில் திமுக ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். தனியாக அவர்கள் ஒரு 5ஜி-யை நடத்தி வருகின்றனர். அது என்னவென்றால், அவர்களது 5-வது தலைமுறை மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று உழைத்து வருகின்றனர். தற்போது திமுக செய்து வருவது, 5ஜி குடும்ப ஆட்சி மோசடி” என்று கடுமையாக தாக்கிப் பேசினார்.

மோடி மேடையில் அணிவகுத்த பாஜக கூட்டணி தலைவர்கள்: பிரதமர் மோடி பங்கேற்ற பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தமாகா தலைவர் ஜிகே வாசன், சரத்குமார், குஷ்பு, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் ராமதாஸுக்கு கைகுலுக்கி வரவேற்றார் பிரதமர் மோடி. பின்னர் பிரதமர் மோடிக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் சால்வை அணிவித்தனர்.

அன்று ‘இந்தியா ஒளிர்கிறது’... இன்று ‘மோடியின் உத்தரவாதங்கள்’!: காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய கார்கே, “நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மாற வேண்டும் என நாடு விரும்புகிறது” என்றார். மேலும், “2004-ல் வாஜ்பாய் முன்வைத்த 'இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்துக்கு என்ன கதி ஏற்பட்டதோ, அதே கதிதான் தற்போதைய ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படும் 'மோடியின் உத்தரவாதங்கள்' முழக்கத்துக்கும் ஏற்படும்” என்று கூறினார்.

பாஜக - பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து: மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக பாஜக - பாமக இடையிலான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

“10 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. வருகிற மக்களவை தேர்தலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க கட்சி முடிவு செய்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

இதனிடையே, கூட்டணி விஷயத்தில் பாமக எடுத்துள்ள முடிவு தமிழக அரசியலை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

மோடியின் ‘ரோடு ஷோ’வில் பள்ளி மாணவர்கள்: நடவடிக்கை என்ன? - கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணியின்போது பள்ளி மாணவர்களை பங்கேற்று நிற்கவைத்த அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அலுவலர் புனிதா உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, “கோவையில் ரோடு ஷோ என்ற பெயரால் பெரிய ஒரு ஆர்ப்பாட்டத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாஜக மற்றும் மோடி எதிர்பார்த்தபடி பொதுமக்கள் யாரும் அங்கு வரவில்லை. அதற்கு மாறாக பள்ளி குழந்தைகளை கொண்டு வந்து தெருவில் நிறுத்தி, அவர்கள் வரவேற்பு கொடுப்பதை போல செய்து இருக்கிறார்கள். இது அப்பட்டமான விதிமீறல் ஆகும். இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

விசிகவில் திருமாவளவன், ரவிக்குமார் மீண்டும் போட்டி!: சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளனர். இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

யாருடன் தேமுதிக கூட்டணி? - பிரேமலதா தகவல்: “இன்னும் ஓரிரு நாளில் நல்ல அறிவிப்பை தருவோம். தேமுதிக யாருடன் கூட்டணி, எத்தனை சீட், எந்த தொகுதி என்பது குறித்த விவரம் அறிவிக்கப்படும். இன்றும், நாளையும் விருப்ப மனு வழங்கப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்கள்தான். வியாழக்கிழமை அனைத்து விவரங்களும் முறையாக அறிவிக்கப்படும்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் ராஜினாமா: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சிக்கு பிஹாரில் ஓர் இடம் கூட கொடுத்ததால், அக்கட்சியின் தலைவர் பசுபதி குமார் பராஸ் தனது மத்திய அமைச்சர் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்துள்ளார். பிஹாரின் ஹாஜிபூர் தனித் தொகுதியின் தற்போதைய எம்.பி.யான பசுபதி குமார் மீண்டும் அதே தொகுதியில் இருந்து 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பினார். அத்தொகுதி என்டிஏ கூட்டணியில் ராம் விலாஸ் பஸ்வானின் மகனான சிராக் பாஸ்வானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெய்ராம் ரமேஷ் கேள்விகளும், அண்ணாமலை பதில்களும்: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகத்தின் சேலம் மற்றும் கேரளாவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி கவனிக்க வேண்டியவை என்று காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷின் பகிர்ந்த பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டபோது தமிழகத்துக்கு செல்லாதது, உரிய நிவாரண நிதியை தமிழக அரசுக்கு வழங்காதது உள்ளிட்ட கேள்விகளை ஜெய்ராம் ரமேஷ் முன்வைத்திருந்தார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, திமுக அரசு மற்றும் காங்கிரஸ் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.

கவிதா கைது விவகாரம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு: மதுபானக் கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா முறைகேடு செய்துள்ளதாக விசாரணை அமைப்பு குற்றம்சாட்டியுள்ள நிலையில், அமலாக்கத் துறை பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பிரிவாக செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பாஜகவில் இணைந்தார் சீதா சோரன்: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மறைந்த தலைவர் துர்கா சோரனின் மனைவியான சீதா சோரன், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை விட்டு விலகி, செவ்வாய்க்கிழமை அவர் பாஜகவில் இணைந்துள்ளார். மேலும், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங். புகார்: பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசு நிதியை பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ள திரிணமூல் காங்கிரஸ், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

காவல் துறையினருடன் மோதல்: 4 நக்ஸலைட்டுகள் உயிரிழப்பு: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் செவ்வாய்க்கிழமை போலீஸாருடன் நடந்த மோதலில் 4 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

மத்திய அரசு 3 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக 237 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு 3 வாரங்களில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x