Published : 19 Mar 2024 07:27 PM
Last Updated : 19 Mar 2024 07:27 PM
சென்னை: பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை குற்றவாளிகளாக முத்திரைக் குத்துவதை விடுத்து, அவர்களை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், ராதாகிருஷ்ணன் சாலையில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி, சாகசங்களில் ஈடுபட்டு மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முகமது ஆசிக், முகமது சாதிக் ஆகிய இருவர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
சென்னையில் முக்கிய சாலைகளில் பைக் சாகசங்களை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளையும், பள்ளி - கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பைக் ரேஸ், பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்களை குற்றவாளிகளாக முத்திரைக் குத்துவதை விடுத்து, பைக் சாகசங்களால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், இந்த இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் அவர்களை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளை கையாள்வதற்கு தேவையான நடைமுறையை உருவாக்க வேண்டும் எனக் கூறி, விசாரணையை ஏப்ரல் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT