Published : 19 Mar 2024 06:59 PM
Last Updated : 19 Mar 2024 06:59 PM
புதுச்சேரி: புதுச்சேரியை சின்னாபின்னமாக்கிய பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசை தோற்கடிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று எதிர்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மித்ரா அல்லது அதற்கு இணையான திட்டத்தின்படி புதுச்சேரியில் பஞ்சாலைகளை பயன்படுத்தி ஜவுளி பூங்கா அமைத்திட ஆளுநர் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் அரசை வலியறுத்தி தொழிலாளர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. புதுச்சேரி ஏஎப்டி ஆலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். ஏஐடியூசி கவுரவத் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ்பொன்னையா, பொதுச் செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரியில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்திடவும், மாநிலத்தில் பொருளாதாரம் மேம்பாடு அடைந்திடவும், பஞ்சாலை பாரம்பரியத்தையும், பெருமையையும் நிலைநிறுத்தி ஜவுளி பூங்கா அமைத்திட புதுச்சேரி பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
எதிர்கட்சித் தலைவர் சிவா கலந்து கொண்டு பேசியது: ''பாஜக அரசு புதுச்சேரி மாநிலத்துக்கு 3 ஆண்டு காலத்தில் எதையும் செய்யவில்லை. மூடிய பஞ்சாலைகள் திறப்பதற்கு உண்டான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக தேதியிட்டு மூடிய பெருமை இந்த அரசையே சாரும். எதைப் பற்றியும் கவலையில்லாத முதல்வராக ரங்கசாமி உள்ளார். புதுச்சேரி மக்களின் அன்பை பெற்றவராக காட்டிக்கொள்ளும் ரங்கசாமியின் உண்மை முகம் யாருக்கும் தெரியவில்லை. புதுச்சேரி மக்களைப் பற்றி, தொழிலாளர்களைப் பற்றி கவலைப்படமால் 19 கார்ப்பரேஷனை ஒழித்த பெருமை ரங்கசாமியையே சாரும்.
புதுச்சேரிக்கு ஆளுநராக தமிழிசை வந்தவுடன் ஓர் ஆட்சியை கலைத்த பெருமைக்குறியவர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கி இந்த 3 ஆண்டுகளில் பல சவால்களை மக்களிடம் அளித்தார். ஆடாத ஆட்டமாடிய ஆளுநர் பதவியை துறந்து வாருங்கள் அரசியல் செய்வோம் என்று நாங்கள் சவால் விட்டோம். இன்று அவர் ராஜினாமா செய்திருக்கிறார். அவர் புதுச்சேரியில் நிற்க வேண்டும். மக்கள் தகுந்த பாடம் புகட்ட காத்திருக்கின்றனர். ஏற்கெனவே டெபாசிட் வாங்காத தமிழிசையை புதுச்சேரி மக்கள் விரட்டியடிக்கும் காலம் வந்துவிட்டது.
புதுச்சேரியில் தாமரை மலர்ந்துவிட்டதாக கூறும் பாஜகவினர் தேர்தலில் நிற்க ஆளில்லாமல் பிராந்தியம், பிராந்தியமாக தேடும் அவல நிலையில் உள்ளனர். புதுச்சேரியை சின்னாபின்னமாக்கிய பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க மக்கள் தயாராகிவிட்டனர். இந்தியா கூட்டணியினர் ஒற்றுமையாக இருந்து வெற்றிவாகை சூடுவோம்'' என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT