Published : 19 Mar 2024 03:54 PM
Last Updated : 19 Mar 2024 03:54 PM
கோவை: கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணியின்போது பள்ளி மாணவர்களை பங்கேற்று நிற்கவைத்த அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அலுவலர் புனிதா உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை மற்றும் சேலத்தில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோவை கவுண்டம்பாளையம் கங்கா மருத்துவமனை அருகே தொடங்கி ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 2.5 கி.மீ. தொலைவு வாகன பேரணி நடைபெற்றது. இதில் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். அதேவேளையில், பள்ளி சீருடையில் மாணவர்களும் பங்கேற்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் கூறுகையில், "கோவையில் பிரதமர் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறியுள்ளனர். இது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது. மேலும் சட்டப்படி குற்றமாகும். குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் கட்சிகளின் மீது தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரான என புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி, விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், பிரதமர் மோடியின் வாகன பேரணியில் பங்கேற்றது சாய்பாபா காலனியைச் சேர்ந்த அரசு உதவி பெறும் ஸ்ரீ சாய் பாபா வித்யாலயம் நடுநிலைப் பள்ளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளியின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்ட கல்வி அலுவலர் புனிதா இன்று பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், பள்ளி மாணவர்களை பிரதமரின் வாகன பேரணியில் ஈடுபடுத்திய தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது குறித்து 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "பள்ளி குழந்தைகளை வாகன பேரணிக்கு அழைத்து சென்றது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மேலும் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தது குறித்து பள்ளி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தின் பதில் குறித்த அறிக்கை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான கிராந்திகுமார் பாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT