Published : 19 Mar 2024 03:10 PM
Last Updated : 19 Mar 2024 03:10 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட 4 மக்களவைத் தொகுதிகளும் 2-வது முறையாக மீண்டும் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் திமுகவினர் அதிருப்தியடைந்துள்ளனர்.
2004-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்குப் பின், புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, இந்த மாவட்டத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதியுடனும், திருமயம், ஆலங்குடி ஆகிய தொகுதிகள் சிவகங்கையுடனும், விராலிமலை கரூருடனும், அறந்தாங்கி ராமநாதபுரத்துடனும் இணைக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கரூர், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகளில் திமுகவும், திருச்சி, சிவகங்கை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டன. அதன் பிறகு 2014-ல் நடைபெற்ற தேர்தலில் 4 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட்டது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளிலும் திமுக போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கியது. அதன்படி, திருச்சி, கரூர், சிவகங்கை ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும், ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் திமுக போட்டியிடாமல் திருச்சியை மதிமுகவுக்கும், ராமநாதபுரத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், சிவகங்கை, கரூரை காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இருந்தும், மாவட்டத்துக்கு உட்பட்ட 4 மக்களவைத் தொகுதிகளிலும் 2-வது முறையாக திமுக போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது உள்ளூர் திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
‘கை’ நழுவிய தொகுதி - வருத்தத்தில் காங்கிரஸ்: திருச்சி மக்களவைத் தொகுதியின் தற்போதைய எம்.பியான திருநாவுக்கரசர் மீண்டும் இந்தத் தொகுதியில் போட்டியிட முயற்சி மேற்கொண்டார். ஆனால், இந்தத் தொகுதி தற்போது கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் கூறியது: காங்கிரஸ் வசமிருந்த திருச்சி தொகுதி மதிமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளது எங்களுக்கு அதிருப்தியாக உள்ளது.
1991-க்குப் பிறகு 2019-ல் தான் திருச்சியில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிபெற்ற தொகுதியை சாதாரணமாக தோழமைக்கட்சிக்கு விட்டுக்கொடுத்ததை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
இனி, திருச்சி தொகுதியை மீண்டும் பெற எத்தனை ஆண்டுகள் காத்திருக்கப்போகிறோமோ தெரியவில்லை என்றனர் வருத்தத்துடன். ஆனாலும், இண்டியா கூட்டணியின் வெற்றி முக்கியம் என்பதால், தோழமை கட்சியின் வெற்றிக்கு பாடுபடுவோம் என காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT