Published : 19 Mar 2024 03:04 PM
Last Updated : 19 Mar 2024 03:04 PM
திருச்சி: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 22-ம் தேதியும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி 24-ம் தேதியும் திருச்சியில் தொடங்க உள்ளனர். திருச்சி மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் என கருதப்படும் நிலையில், இருவரும் இங்கு பிரச்சாரத்தை தொடங்குவதால், திருப்புமுனை தரப்போவது யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சியில் மாநாடு நடத்தினால், தங்களுக்கு திருப்பு முனையாகவே இருக்கும் என்ற நம்பிக்கை திராவிடக் கட்சிகளுக்கு எப்போதும் உண்டு. தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்து 1956-ல் திருச்சியில் நடைபெற்ற திமுக 2-வது மாநில மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யப்பட்டது.
அதன்பின், 1957-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக 124 தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட்டு 15 தொகுதிகளிலும், 1962 தேர்தலில் திமுக சார்பில் 143 தொகுதிகளில் போட்டியிட்டு 50 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதன்பின், 1967-ல் அமோக வெற்றி பெற்று முதல்முறையாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது.
திருச்சியில் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டுக்குப் பின், 1971-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக நடத்திய 11 மாநில மாநாடுகளில் 5 திருச்சியில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல, அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை திருச்சி காட்டூரில் தான் நடத்தினார்.
அதன்பின், 1977-ல் அதிமுக ஆட்சி அரியணை ஏறியது. மேலும், 2011-ல் அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா திருச்சி ஜி-கார்னர் மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதனால், திருச்சியில் தொடங்கிய அனைத்தும் திருப்புமுனையை ஏற்படுத்தியதை தொடர்ந்து திராவிடக் கட்சிகள் மட்டுமின்றி பிற கட்சியினரும் திருச்சியில் தங்களது மாநாடுகள், கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, 2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திருச்சி சிறுகனூர் பகுதியில் திமுகவின் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தனது முதல் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தை திருச்சி சிறுகனூரில் மார்ச் 22-ம் தேதி நடத்த உள்ளது.
இதில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர் தொகுதி கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். இதில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதேபோல, அதிமுக சார்பில் மார்ச் 24-ம் தேதி திருச்சி நவலூர் குட்டப்பட்டில் முதல் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். தமிழகத்தில் உள்ள 2 பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்க உள்ளதால், எந்தக் கட்சிக்கு திருப்புமுனையை தரப்போகிறது என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பின் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT