Published : 19 Mar 2024 01:26 PM
Last Updated : 19 Mar 2024 01:26 PM
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஐந்து முறை அல்ல, 50 முறை தமிழகத்துக்கு வந்தாலும் திராவிடத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முடியாது, அவர் எதையோ நினைத்துக் கொண்டு எதையோ பேசுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் திருச்சியில், கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது கட்சி வேட்பாளருடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிட இயக்கத்துக்கு அண்ணா காலத்திலிருந்து கோட்டையாக இருந்த திருச்சியை மதிமுகவுக்கு ஒதுக்கி கொடுத்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி ஐந்து முறை அல்ல, 50 முறை தமிழகத்துக்கு வந்தாலும் திராவிடத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முடியாது, அவர் எதையோ நினைத்துக் கொண்டு எதையோ பேசுகிறார்.
‘மேரா பாரத் மேரா பரிவார்’ என்று ஒவ்வொரு இடத்திலும் கூச்சலிட்டார். அப்படியென்றால் இந்தியா என்பது அவரிடைய பரிவாரம். அவரின் அமைப்பில் இருந்த பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இம்முறை மதிமுக திருச்சியில் மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இதை மக்கள் பார்க்கதான் போகிறார்கள்” என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “தேர்தலில் என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என இல்லாமல் அனைத்து கட்சியினருக்கும் பொதுவானது. இவற்றை யாரும் மீறக் கூடாது; அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும். ஆனால் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, இந்த தேர்தல் விதிகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறுகின்ற வகையில், தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக கோவையில் ரோடு ஷோ என்ற பெயரால் பெரிய ஒரு ஆர்ப்பாட்டத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாஜக மற்றும் மோடி எதிர்பார்த்தபடி பொதுமக்கள் யாரும் அங்கு வரவில்லை. அதற்கு மாறாக பள்ளி குழந்தைகளை கொண்டு வந்து தெருவில் நிறுத்தி, அவர்கள் வரவேற்பு கொடுப்பதை போல செய்து இருக்கிறார்கள். இது அப்பட்டமான விதிமீறல் ஆகும். இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம். மோடி மீதும், பாஜக மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எங்கள் கட்சியின் சார்பில் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT