Published : 19 Mar 2024 02:09 PM
Last Updated : 19 Mar 2024 02:09 PM
மதுரை: நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் மதுரை மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் மதுரையில் அக்கட்சியே நேரடியாக போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன் போட்டியிட்டார். அவர் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனிடம் தோல்வியடைந்தார். இம்முறை அவர் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை.
கட்சித் தலைமை, திமுக கூட்டணிக்கு போட்டி கொடுக்கும் வகையில் பொருளாதார அடிப்படையில் வசதியான வேட்பாளரை இம்முறை மதுரையில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்த டாக்டர் சரவணன், கட்சித் தலைமையிடம் ‘சீட்’ கேட்டு வருகிறார். அவ ருடன் கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் பெயர்களும் விவாதிக்கப்படுகின்றன. ஆனால், மற்றவர்கள் தேர்தல் செலவுகளை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுவதால் டாக்டர் சரவணனையே வேட்பாளராக அறிவிக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கடைசி நேரத்தில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் தேமுதிகவுக்கு மதுரையை விட்டுக் கொடுக்கவும் அதிமுக கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று அல்லது நாளைக்குள் மதுரையில் அதிமுக போட்டியிடுமா? வேட்பாளர் யார் என்பது தெரிய வரும். இதனிடையே அதிமுக வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மாநகர, புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடத்தப்பட்டது. இதில் அதிமுக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டதால், அக்கட்சி தலைமை உட்பட உள்ளூர் முன்னாள் அமைச்சர்கள், முக்கியநிர்வாகிகள் புத்துணர்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT