Published : 19 Mar 2024 12:22 PM
Last Updated : 19 Mar 2024 12:22 PM
விழுப்புரம்: திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று தலைமை நிர்வாகிகள் பங்கேற்ற உயர்மட்ட குழு கூட்டம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டங்களுக்குப் பின் கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பாஜக கூட்டணியில் பாமக இடம் பெறுகிறது என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 6.40க்கு தைலாபுரம் தோட்டத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர். அவர்களை அன்புமணி வாசலுக்கு வந்து வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். பின்னர் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை அண்ணாமலை மற்றும் எல்.முருகனுக்கு அறிமுகப்படுத்தினார். அதேபோல அண்ணாமலையும் பாஜகவினரை அறிமுகப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சிறிதுநேரம் அவர்கள் உரையாடிவிட்டு சிற்றுண்டி சாப்பிட சென்றனர். இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் சிற்றுண்டியில் பங்கேற்றனர்.
பின்னர் தேர்தல் ஒப்பந்தத்தை எல்.முருகன் ராமதாஸிடம் கொடுத்தார். அதை படித்து பார்த்த ராமதாஸ் சற்று முகத்தை சுருக்கினார்.
ராஜ்ய சபா சீட் பாமக எதிர்பார்த்திருந்தது. ஆனால் ஒப்பந்தத்தில் அது பற்றிய எந்த தகவலும் இடம்பெறவில்லை என்பதால் ராமதாஸின் முகம் சுருங்கியதாக சொல்லப்படுகிறது.
இதன் பின்னர் ராமதாஸ், அன்புமணி, எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் தனி அறையில் ஆலோசனை செய்தனர். கிட்டத்தட்ட அரைமணி நேர ஆலோசனைக்குப் பின் 7.50க்கு வெளியே வந்து ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவராக ராமதாஸ் இருப்பார். அவரின் அனுபவம் தேசிய அளவில் தேவைப்படுகிறது. அவரது எண்ணங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்" என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, "கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. நாட்டின் நலன் கருதி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரவும், பிரதமர் மோடி நல்லாட்சி தொடரவும் இணைந்துள்ளோம்.
தமிழகத்தை 60 ஆண்டு கால ஆட்சியை நடத்தி வருபவர்கள் மீது மக்கள் வெறுப்புடன் உள்ளனர். மாற்றம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை பூர்த்தி செய்ய நாங்கள் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்படுவார்" என்றார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ், அன்புமணி இருவரும் சேலம் புறப்பட்டுச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT