Published : 19 Mar 2024 11:43 AM
Last Updated : 19 Mar 2024 11:43 AM
சென்னை: "ஏழைகளின் கல்விக் கோயில்களான அரசு பள்ளிகளை மூடுவதை அனுமதிக்க முடியாது. தமிழக அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதனடிப்படையில் முதல் கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 31 தொடக்கப் பள்ளிகளும் ஒரு நடுநிலைப் பள்ளியும் மூடப்படவிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. ஏழைகளின் கல்விக் கோயில்களான அரசு பள்ளிகளை மூடுவதை அனுமதிக்க முடியாது. தமிழக அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தலா 30 மாணவர்; ஆறு முதல் எட்டு வரை தலா 35; ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கு தலா 40 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் தலா 50 மாணவர்கள் குறைந்தபட்சம் இருக்க வேண்டும் என்றும்; அதற்கும் குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட, தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அரசு பள்ளிகளை இந்த அடிப்படையில் மூட நினைத்தால் தமிழ்நாட்டில் உள்ள 90% பள்ளிகளை மூட வேண்டிய நிலை உருவாகும்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு மக்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. அரசு பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்க்க அவர்கள் தயாராகவே இருக்கின்றனர். ஆனால், அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. சுமார் 4000 பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். வகுப்புகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது ஒரு லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அரசு பள்ளிகளின் நிலைமை இவ்வாறு இருக்கும் போது எந்த பெற்றோர் தங்களின் பிள்ளைகளை சேர்க்க முன்வருவார்கள்? என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.
வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கூட தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல லட்சம் புதிய மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களின் விகிதத்திற்கு இணையாக புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இது அரசின் தவறு தான். ஆசிரியர்களே இல்லாமல் பள்ளிகளை நடத்துவதும், அங்கு மாணவர்கள் போதிய அளவில் சேராவிட்டால் பள்ளிகளை மூடுவதும் நியாயமல்ல. ஒரே ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்காக அரசு பள்ளிகள் நடத்தப்பட வேண்டும்.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை சரி செய்ய அரசு முன்வர வேண்டும். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 32 பள்ளிகளையும், அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான பள்ளிகளையும் மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசு முன்வர வேண்டும்” என்று அன்புமணி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT