Published : 19 Mar 2024 05:17 AM
Last Updated : 19 Mar 2024 05:17 AM
சென்னை: மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக பாமக அறிவித்துள்ளது. பாமகவுக்கு 10 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க பாஜக ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.
தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டன. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த முறை போலவே 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதற்கிடையே, அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மேலிட பொறுப்பாளர்களான வி.கே.சிங், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் 10 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சி அமைந்த பிறகு மத்திய அமைச்சர் பதவி பற்றி பேசி முடிவு செய்வதாகவும் உறுதி அளித்தனர்.
இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், பாமக எந்த பக்கம் நகரும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக உயர்நிலை குழு ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி,வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், தீவிர ஆலோசனைக்கு பிறகு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, பாஜக மேலிட பொறுப்பாளர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோர் காணொலியில் ராமதாஸ், அன்புமணியிடம் பேசியது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூறியதாவது: பாமகவின் எதிர்கால நலனை முன்னிட்டும், இத்தேர்தலில் பாமக வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையிலும் சிறந்த செயல்பாட்டுக்கான கூட்டணியுடன் இந்த தேர்தலை பாமக சந்திக்க உள்ளது. கடந்த பிப்ரவரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் கட்சி நிறுவனர் ராமதாஸிடம் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அவரது அறிவிப்புக்கு இணங்க, 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பாமக முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தம் 19-ம் தேதி (இன்று) கையெழுத்தாகிறது. எந்தெந்த தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்படுகின்றன, வேட்பாளர்கள் யார் என்று ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக - பாமக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், சேலத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அன்புமணியும் பங்கேற்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT