Published : 18 Mar 2024 10:20 PM
Last Updated : 18 Mar 2024 10:20 PM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பில் அமைய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு திருப்பத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூர் கடந்த 2019-ம் ஆண்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, மாவட்டத்துக்கு தேவையான அரசு அலுவலகங்கள், அரசு அதிகாரிகள் படிப்படியாக நியமிக்கப்பட்டனர். அதிலும், ஒரு சில அலுவலகங்கள் தற்போது வரை வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டுதான் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.
அரசு அதிகாரிகளின் காலிப்பணியிடங்களும் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. இந்நிலையில், திருப்பத்தூர் நீதிமன்றத்தை மாவட்ட நீதிமன்றமாக தரம் உயர்த்தி புதிய கட்டிடத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் வளாகம் மற்றும் குடியிருப்பு வளாகம் அமைக்க வேண்டும் என திருப்பத்தூர் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
திருப்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட இடத்திலேயே ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தற்போது வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு கிராமத்தில் 8 ஏக்கரில் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்பதற்கான இடம் ஒதுக்கீடு செய்து அதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கியுள்ளது. இதற்கு திருப்பத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து ஜோலார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், ‘ இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது, ‘‘ திருப்பத்தூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு, கூடுதல் அமர்வு நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், 3 நீதித்துறை நடுவர் நீதிமன்றம், 2 உரிமையில் நீதிமன்றம், விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
மாவட்ட நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிமன்றம், போக்சோ நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், நுகர்வோர் நீதிமன்றம், சட்டப்பணிகள் ஆணைக்குழு உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதால் திருப்பத்தூர் நகரிலேயே மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம்.
திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகரமாக திருப்பத்தூர் இருப்பதால் திருப்பத்தூர் வட்டத்திலேயே திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் நகர் பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாவட்ட நீதிமன்றம் மட்டும் தற்போது வாணியம்பாடி வட்டம், சின்ன வேப்பம்பட்டு பகுதியில் அமைப்பதற்கான அனுமதி வழங்கியிருப்பது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஏறத்தாழ 350 வழக்கறிஞர்கள் தொழில் செய்து வருகின்றனர். தற்போது இங்கிருந்து சுமார் 20 கி.மீ., தொலைவில் உள்ள சின்னவேப்பம்பட்டு பகுதிக்கு மாவட்ட நீதிமன்றம் இடமாற்றம் செய்யப்பட்டாலும், வழக்கறிஞர்கள் மட்டுமின்றி வழக்காடிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
மேலும், சின்னவேப்பம்பட்டு பகுதியில் போக்குவரத்து இட வசதி இல்லை. பேருந்து நிறுத்தம் கூட இல்லை. இதனால், பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் மாவட்ட நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை மறு பரிசீலினை செய்ய வேண்டும் என்பதே திருப்பத்தூர், ஜோலார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது’’ என்றார்.
இது குறித்து திருப்பத்தூர் அரசு வழக்கறிஞர் பி.டி.சரவணனிடம் கேட்டபோது, ‘‘வாணியம்பாடியில் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படுவதை ஒட்டுமொத்தமாக நாங்கள் எதிர்க்கிறோம். இதனால், வழக்றிஞர்கள் மட்டுமின்றி, வழக்காடிகள், காவல் துறையினர் என பலர் பாதிக்கப்படுவார்கள். இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) திருப்பத்தூரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நீதிமன்றம் புறக்கணிப்பு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளோம்’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT