Published : 18 Mar 2024 07:58 PM
Last Updated : 18 Mar 2024 07:58 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் நேரடியாக களம் காணுகிறது.
திருநெல்வேலி தொகுதியில் 1952-ம் ஆண்டு முதல் கடந்த 2019-ம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் 5 முறை காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 1952, 1957 தேர்தல்களில் பெ.தி.தாணுப்பிள்ளையும், 1962-ல் முத்தையாவும், 2004-ல் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தனும், 2009-ல் எஸ்.எஸ். ராமசுப்புவும் வெற்றி பெற்றுள்ளனர்.
2014 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ராமசுப்பு போட்டியிட்டு 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தார். அதன்பின் தற்போது 10 ஆண்டுகளுப்பின் இத்தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நேரடியாக போட்டியிடுகிறது.
இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இம்முறை போட்டியிட தற்போதைய நாங்குநேரி சட்டப் பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தற்போதைய தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் வாய்ப்பு கேட்பதாக கூறப்படுகிறது.
இதில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனுக்கு போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.இந்நிலையில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதனிடையே, திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். திருநெல்வேலியிலுள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பாக திரண்ட அவர்கள் அங்குள்ள இந்திரா காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவ்வழியாக வந்த பேருந்துகள் வாகனங்களில் இருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT