Published : 18 Mar 2024 07:13 PM
Last Updated : 18 Mar 2024 07:13 PM

மார்ச் 24 முதல் 31 வரை இபிஎஸ் சூறாவளி பிரச்சாரம்: திருச்சியில் தொடங்குவதாக அதிமுக அட்டவணை

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 24 முதல் மார்ச் 31 வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார். மார்ச் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு அவர் தனது பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்குகிறார், என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட தகவல்: ஏப்ரல் 19-ம் தேதியன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அதிமுகவின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி மு.பழனிசாமி மார்ச் 24 முதல் மார்ச் 31 வரை முதல் கட்டமாக, தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, வரும் மார்ச் 24-ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு திருச்சி நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோவில் பகுதியில் தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். மார்ச் 26-ம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல், எம்ஜிஆர் திடலிலும், இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் உள்ள வாகையாடிமுனையிலும் பிரச்சாரம் செய்கிறார்.

மார்ச் 27-ம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் திடலிலும், இரவு 7 மணிக்கு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள 18-ம் படி கருப்பசாமி கோயில் அருகிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மார்ச் 28-ம் தேதி மாலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பாவடி தோப்பு திடலிலும், இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.

மார்ச் 29-ம் தேதி மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் ஹைவே இன் அருகிலும், இரவு 7 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரத்தில் உள்ள ராஜேந்திரபிரசாத் சாலையில் உள்ள அன்னை தெரசா பள்ளி அருகிலும் பிரச்சாரம் செய்கிறார்.

மார்ச் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு புதுச்சேரியில் கடலூர் சாலையில் நீதிமன்றம் எதிரில் உள்ள ரோடியர் மைதானத்திலும், மாலை 6 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திலும் பிரச்சாரம் செய்கிறார்.

மார்ச் 31-ம் தேதி மாலை 3.30 மணிக்கு சிதம்பரம் புறவழிச்சாலையிலும், மாலை 5.30 மணிக்கு மயிலாடுதுறை சின்ன கடைத் தெருவிலும், இரவு 7.30 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டம் திருவாரூர் தெற்கு வீதியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x