Last Updated : 18 Mar, 2024 06:19 PM

 

Published : 18 Mar 2024 06:19 PM
Last Updated : 18 Mar 2024 06:19 PM

திமுக கூட்டணியில் தேனி தொகுதியை ‘கைவிட்ட’ காங்கிரஸ் - பின்புலம் என்ன? 

பிரதிநிதித்துவப் படம்

தேனி: கடந்த தேர்தலில் காங்கிரஸின் மந்தமான பிரச்சாரம், வெளியூர் வேட்பாளர், கோஷ்டிப்பூசல் போன்றவை தேனி தொகுதியின் தோல்விக்கு காரணமாகிவிட்டது. இதனால் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற திமுக கூட்டணியால் இந்தத் தொகுதியை மட்டும் கைப்பற்ற முடியவில்லை. இதனால், இம்முறை திமுகவே நேரடியாக களம் காண உள்ளது.

தேனி மக்களவைத் தொகுதி ஆரம்பத்தில் பெரியகுளம் மக்களவைத் தொகுதியாக இருந்தது. அப்போது பெரியகுளம், தேனி, போடி, கம்பம், ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது. 1952-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரை 14 முறை தேர்தல் நடைபெற்றது. பின்பு 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் பெரியகுளம் தொகுதி நீக்கப்பட்டு தேனி மக்களவைத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது.

இந்தத் தொகுதியில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், போடி ஆகிய சட்டசபைத் தொகுதிகளுடன் மதுரை மாவட்டத்தின் சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய சட்டசபைத் தொகுதிகளையும் உள்ளடக்கியதாக மாற்றப்பட்டது. புதியதாக உருவாக்கப்பட்ட தேனி தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 3 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது.

ஆக மொத்தம் 17 முறை நடைபெற்ற தேர்தலில் அதிமுக 8 முறையும், காங்கிரஸ் 5 முறையும், திமுக 2 முறையும், சுதந்திரா கட்சி, இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் தலா ஒரு முறையும்வெற்றி பெற்றுள்ளன.

கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் (2019) பிரதான வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் ப.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். தமிழகத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி. இவரே.

இந்நிலையில், வரும் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இத்தொகுதியை தங்களுக்கு ஒதுக்கக் கோரி மேல்மட்ட அளவில் கடுமையாகப் போராடின. இந்நிலையில், தேனியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் பார்வையாளர் ஜெயசிம்ஹா நாச்சியப்பனிடம் காங்கிரஸார் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதில், கடந்த தேர்தலில் தேனியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியூர் வேட்பாளர் என்பது சற்று பின்னடைவை ஏற்படுத்தியது.

மேலும் பிரச்சாரத்தில் பெரிய அளவில் அவர் ஆர்வம் காட்டவில்லை, கோஷ்டி பூசலாலும் காங்கிரசுக்கு தோல்வி ஏற்பட்டது என்று நேரடியாகவே குற்றம் சாட்டினர். இதே குற்றச்சாட்டை திமுகவும் தனது தலைமையிடம் தெரிவித்தது. இதை எல்லாம் திமுக தலைமை ஆலோசனைக்கு எடுத்துக் கொண்டது. தமிழகம் முழுவதும் வெற்றி பெற்ற திமுக கூட்டணியால் தேனியை மட்டும் கைப்பற்ற முடியவில்லை. இது திமுகவுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் இத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கினால் வெளியூர் வேட்பாளர்களையே களம் இறக்க வேண்டியதாக இருக்கும். மேலும் காங்கிரஸின் கோஷ்டி பூசல் போன்ற பிரச்னையால் மீண்டும் இத்தொகுதியை இழக்கவேண்டியது இருக்கும் என்று திமுக கணக்கிட்டது. இதனைத் தொடர்ந்து இத்தொகுதி தற்போது திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகள் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு திமுக நேரடியாக களம் இறங்க உள்ளது. இதனால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x