Published : 18 Mar 2024 02:05 PM
Last Updated : 18 Mar 2024 02:05 PM

திமுக நேரடி களம் காணும் 21 தொகுதிகளும், கூட்டணிக் கட்சிகளுடன் மாற்றிக் கொண்ட இடங்களும்!

திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

சென்னை: திமுக கூட்டணியில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவுபெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய இரு கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டன. மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள்:

  1. திருவள்ளூர் (தனி)
  2. கடலூர்
  3. மயிலாடுதுறை
  4. சிவகங்கை
  5. திருநெல்வேலி
  6. கிருஷ்ணகிரி
  7. கரூர்
  8. விருதுநகர்
  9. கன்னியாகுமரி
  10. புதுச்சேரி

திமுக கூட்டணியில் ஏற்கெனவே விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள், ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் மற்றும் மதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததன் மூலம் திமுக நேரடியாக களம் காணும் 21 தொகுதிகளின் விவரங்கள் தெரியவந்துள்ளன.

  • திமுகவின் 21 தொகுதிகள்:
  • தென் சென்னை
  • மத்திய சென்னை
  • வட சென்னை
  • ஸ்ரீபெரும்புதூர்
  • காஞ்சிபுரம்
  • வேலூர்
  • அரக்கோணம்
  • திருவண்ணாமலை
  • ஆரணி
  • கள்ளக்குறிச்சி
  • தருமபுரி
  • கோவை
  • பொள்ளாச்சி
  • சேலம்
  • ஈரோடு
  • நீலகிரி
  • தஞ்சாவூர்
  • பெரம்பலூர்
  • தேனி
  • தென்காசி
  • தூத்துக்குடி

மாற்றிக் கொண்ட தொகுதிகள்: கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திருச்சி மற்றும் தேனி தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் திருச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வென்றிருந்தார். அதேநேரம் தேனியில் போட்டியிட்ட இளங்கோவன் தோல்வி அடைந்தார். இதேபோல் ஆரணி தொகுதி கடந்த முறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக தற்போது கடலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடலூர், மயிலாடுதுறை மற்றும் நெல்லை மூன்றுமே கடந்த முறை திமுக வென்ற தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை திமுக விட்டுக்கொடுத்துள்ளது. மேலும், கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட ஆரணி மற்றும் தேனி தொகுதிகளில் திமுக இம்முறை நேரடியாக களம் காண்கிறது. இதற்கிடையே, கடந்தமுறை காங்கிரஸுக்கு திருச்சி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த முறை ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை மதிமுகவுக்கு திருச்சி ஒதுக்கப்பட்டுள்ளது.

தனிச் சின்னத்தில் போட்டி: கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் விசிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தங்களின் சின்னத்தை விடுத்து திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றன. ஆனால், இம்முறை விசிகவும் மதிமுகவும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

இம்முறை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஒரே கூட்டணிக் கட்சி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி. நாமக்கல் தொகுதியில் போட்டியில் இக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x