Published : 18 Mar 2024 03:22 PM
Last Updated : 18 Mar 2024 03:22 PM

திண்டுக்கல் தொகுதியை எஸ்டிபிஐ-க்கு ஒதுக்க தயாராகும் அதிமுக? - பின்னணி அரசியல்

திண்டுக்கல்: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஒத் துழைப்பு இல்லாததால் திண்டுக்கல் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தொகுதியைப் பெற கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ ஆர்வம் காட்டி வருகிறது.

எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய போது திண்டுக்கல் மக்களவைத் தொகுதி யில் நடந்த இடைத்தேர்தலில் அக்கட்சி முதல் முறையாக போட்டியிட்டு வென்றது. இந்த இடைத் தேர்தலில்தான் அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. இதையடுத்து எம்.ஜி.ஆர்., அவரை தொடர்ந்து ஜெயலலிதா ஆகியோர் திண்டுக்கல் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல் தங்கள் கட்சியினரையே களமிறக்கி வந்தனர். இந்த நடைமுறை கடந்த மக்களவைத் தேர்தலில் மாறியது.

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவுக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்ட்டது. அப்போது அமைச்சராக இருந்த திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோருக்கு இடையே கோஷ்டி பூசல் நிலவியது. இதன் காரணமாகத்தான் பாமகவுக்கு சீட் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. கடந்த முறை திண்டுக்கல் தொகுதியில் திமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இந்த முறையும் இத்தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் ஆர்வம் காட்டவில்லை. முன்னாள் அமைச்சர் களின் வாரிசுகளில் ஒருவர் அதிமுக வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டால் ஆளுங்கட்சிக்கு ஈடு கொடுத்து தேர்தல் செலவு செய்ய முடியும் என பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆனால், அதை முன்னாள் அமைச்சர்கள் இருவரும் ஏற்க தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் பிற கட்சியினரும் சீட் கேட்பதில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

இதனால், இந்த முறையும் கூட்டணிக் கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்க அதிமுக தலைமை ஆலோசித்து வருகிறது. அதிமுகவின் கூட்டணிக் கட்சியான எஸ்டிபிஐ, தங்களுக்கு திருநெல்வெலி, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனக் கோரி வருகிறது. தற்போதைய சூழலில் அந்தக் கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியை அதிமுக ஒதுக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x