Published : 18 Mar 2024 03:16 PM
Last Updated : 18 Mar 2024 03:16 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான மனநிலையால், திமுகவின் அஸ்திவாரத்தை வன்னியர்களின் வாக்கு வங்கி அசைத்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததும், திருவண்ணாமலை அடுத்த பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட் தொடங்குவதற்கான முன்னெடுப்பு பணிகள் நடைபெற்றன. 1,200 ஏக்கர் விவசாய நிலம், 500 வீடுகளை கையகப்படுத்த திட்டமிடப் பட்டது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், சிப்காட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்தது.
இவர்களில், பெரும்பான்மையான விவசாயிகள், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் களம் இறங்கினாலும், பாமக மட்டும் போராட்டத்தைத் தீவிரப் படுத்தியது. ‘யார் தடுத்தாலும்’ பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட் அமைந்தே தீரும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சூளுரைத்தார். இதற்கு, விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். விவசாயிகளின் உறுதியான போராட்டத்தால், தொடக்க நிலையிலேயே பாலியப்பட்டு சிப்காட் திட்டம் மவுனமானது.
இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த நாயுடு மங்கலத்தில் கடந்த 1989-ல் நிறுவப்பட்ட வன்னியர் சங்கத்தின் ‘அக்னி கலசம்’ கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் அகற்றப்பட்டது. இதன் பின்னணியில் அமைச்சர் எ.வ.வேலு இருப்பதாக கூறி, பாமக மற்றும் வன்னியர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட நிர்வாகம், அக்னி கலசத்தை மீண்டும் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதி அளித்ததாக கூறப் படுகிறது.
ஆனால், 2 ஆண்டுகள் கடந்தும் நடவடிக்கை எடுக்காததால், தடையை மீறிக் கடந்த 13-ம் தேதி அக்னி கலசத்தை பாமக மற்றும் வன்னியர் சங்கத்தில் நிறுவினர். அப்போது பேசிய முன்னணி நிர்வாகிகள், “அமைச்சர் எ.வ.வேலுவின் உத்தரவின் பேரில், வன்னியர்கள் புனித அடையாளமான அக்னி கலசத்தை மாவட்ட நிர்வாகம் அகற்றியது” எனப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினர். முன்ன தாக, கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், வன்னியர்களுக்கு எதிரான நடவடிக்கையைக் காவல் துறையினர் தீவிரப் படுத்தியதாகவும், இதன் பின்னணி யிலும் அமைச்சர் எ.வ.வேலு உள்ளதாகக் குற்றஞ் சாட்டப்பட்டது.
இதற்கிடையில், செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் 3-வது கட்ட விரிவாக்கத் திட்டத்துக்காக 3,200 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் பல நூறு வீடுகளைக் கையகப்படுத்த திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து 250 நாட்களைக் கடந்து, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில், 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். நிலத்தைப் பாதுகாக்கப் போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டன. கூட்டணிக் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தன.
இதையடுத்து, 7 விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளதை நாளிதழில் படித்த போதுதான் தனக்குத் தெரிய வந்ததாக மாவட்டத்தின் அமைச்சராக உள்ள எ.வ.வேலு கூறியது, சாமானிய மக்களின் புருவத்தை உயர்த்தியது. பின்னர் அவர், கைது நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட கிடையாது, அவர்கள், அனைவரும் வெளி ஊர்களைச் சேர்ந்தவர்கள் என சட்டப் பேரவையில் தனது கருத்தைப் பதிவு செய்தார். இதற்கும், கண்டனம் எழுந்தது.
இதற்கிடையில், சிப்காட் தேவை எனக் கூறி வாகன பேரணி, உண்ணாவிரதம் என அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்ட காட்சிகளின் பின்னணியில் அதிகார மையம் இருந்தது வெட்ட வெளிச்சமானது. பாலியப்பட்டு சிப்காட் திட்டம் போலவே, மேல்மா சிப்காட் திட்டத்துக்காகக் கையகப் படுத்தப்பட உள்ள நில உரிமையாளர்களின் பெரும்பான்மை யானவர்கள் வன்னியர்கள். இதனால், இவர்களுக்கு ஆதரவாக பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
வன்னியர்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு மீது அதிருப்தி நிலவுகிறது. இதன் எதிரொலியாகக் கடந்தாண்டு இறுதியில், திருவண்ணாமலை மாவட்ட வன்னியர் குல சத்திரிய வல்லாள மகாராஜ மடாலய சங்கத் தலைவராக இருந்த மறைந்த முன்னாள் திமுக எம்.பி., வேணுகோபால், அமைச்சர் எ.வ.வேலுவை அழைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனால், வன்னியர் சமுதாயத்தின் விழாவில் பங் கேற்பதை அமைச்சர் எ.வ.வேலு தவிர்த்து விட்டார்.
வன்னியர் சமுதாய மக்களுக்கு எதிராக அமைச்சர் எ.வ.வேலு செயல்படுகிறார் என்ற மனநிலை, அவர்களிடையே தொடர்ந்து நிலவுகிறது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் வலுவாக இருக்கும் திமுகவின் அஸ்திவாரத்தை வன்னியர்களின் வாக்கு வங்கி அசைத்துப் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.
அமைச்சருக்கு தொடர்பு இல்லை: இது குறித்து வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “சாதி பாகுபாடின்றி அமைச்சர் எ.வ.வேலு செயல்படுகிறார். சாதி பார்த்து திட்டங்களைக் கொண்டு வரவில்லை. வன்னியர்களுக்கு எதிராக அவர் செயல்படவில்லை. சாலை விரிவாக் கத்துக்காக அக்னி கலசம் அகற்றப்பட்டது. தொழில் வளர்ச்சிக்காக பாலியப்பட்டு, மேல்மா சிப்காட் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில், பல சமூகத்தைச் சேர்ந்தவர்களின் விவசாய நிலங்கள் உள்ளன. வீரளூர் கிராமத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க காவல் துறை நடவடிக்கை எடுத்தது. இதில், அமைச்சருக்கு எந்த தொடர்பும் இல்லை. வன்னியர் சமுதாய விழாவில், நிர்வாகிகளிடையே கருத்து ஒற்றுமை இல்லாததால், அவ்விழாவில் பங்கேற்பதை தவிர்த்து விட்டார். திமுகவை வன்னியர் சமூக மக்கள் தொடர்ந்து ஆதரிக்கின்றனர்” என்றார்.
பாலியப்பட்டு சிப்காட் திட்டம் போலவே, மேல்மா சிப்காட் திட்டத்துக்காகக் கையகப்படுத்தப்பட உள்ள நில உரிமையாளர்களின் பெரும் பான்மையானவர்கள் வன்னியர்கள். இதனால், இவர்களுக்கு ஆதரவாக பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT