Published : 18 Mar 2024 01:24 PM
Last Updated : 18 Mar 2024 01:24 PM
சென்னை: காங்கிரஸ் - திமுக இடையே தொகுதிப் பங்கீடு முடிந்து மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர புதுச்சேரி தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திருச்சி மற்றும் தேனி தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் திருச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வென்றிருந்தார். அதேநேரம் தேனியில் போட்டியிட்ட இளங்கோவன் தோல்வி அடைந்தார். இதேபோல் ஆரணி தொகுதி கடந்த முறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இந்த மூன்று தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை. மாறாக, திருச்சிக்கு பதிலாக மயிலாடுதுறையும், தேனிக்கு பதிலாக நெல்லை தொகுதியும், ஆரணிக்கு பதிலாக கடலூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றபடி, கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகள் அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்களில் 4 தொகுதிகள், வட மாவட்டங்களில் 2 தொகுதிகள், டெல்டாவில் 2 தொகுதிகள், மேற்கு மாவட்டமான கிருஷ்ணகிரி ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.
தொகுதி பங்கீட்டுக்கு பின் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, “இரண்டு அல்லது மூன்று தினங்களில் வேட்பாளர் அறிவிப்பு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மதிமுகவுக்கு திருச்சி ஒதுக்கீடு: இந்த நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதிமுக வெளியிட்ட அறிக்கையில், “நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில், மறுமலர்ச்சி திமுக-வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி தொகுதிக்கான வேட்பாளரை கழகப் பொதுச்செயலாளர் வைகோ மாலை 3.30. மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் அறிவிக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தமுறை காங்கிரஸுக்கு திருச்சி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வென்றிருந்தார். அதேபோல் மதிமுகவுக்கு கடந்த முறை ஈரோடு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இம்முறை மதிமுகவுக்கு திருச்சி ஒதுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT