Published : 18 Mar 2024 10:58 AM
Last Updated : 18 Mar 2024 10:58 AM
பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் ‘இந்து தமிழ் திசை’, நாளிதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிகவும் வலுவாக உள்ள நிலையில் பாஜக வெற்றி பெறும் என்று எந்த நம்பிக்கையில் கூறுகிறீர்கள்? - திமுக வலுவான கூட்டணி என்பது மாயை. இப்போது, பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது என அனைத்து கருத்து கணிப்புகளும் சொல்கின்றன. நோட்டாவுக்கு கீழ் ஓட்டு வாங்கின கட்சி என பாஜகவை கூறினார்கள். இப்போது, வாக்கு சதவீதம் எங்களுக்கு அதிகரித்து உள்ளது. இதுவே தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி. நாங்கள் வலுவாக இருக்கிறோம்.
அதிமுகவின் வரவுக்காக கடைசி நேரம் வரை பாஜக காத்திருப்பதாகக் கூறப்படுகிறதே. இது உங்கள் கட்சியின் இமேஜை பாதிக்காதா? - அதிமுக வந்தால்தான் மோடி பிரதமராக முடியும் என்ற நிலை கிடையாது. அதிமுகவுக்கும் அது தெரியும். பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற போகிறது. இண்டியா கூட்டணி 100 இடங்களை தாண்டாது. இதில், அதிமுகவும், பாஜகவும் தமிழகத்தில் தனித்தனியாக போட்டியிட்டால் இண்டியா கூட்டணிக்கு தமிழகத்தில் 30 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதுவே அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டால், இண்டியா கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என கருத்துக் கணிப்பு சொல்கிறது. எனவே, திமுகவை வீழ்த்துவதற்குதான் அதிமுகவை கூட்டணிக்காக நாங்கள் அழைக்கிறோம். மத்தியில் ஆட்சி அமைப்பதற்காக அல்ல. அதிமுகவுக்குதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க பாஜகவின் தயவு தேவைப்படும். ஆனால், மோடி பிரதமராக பாஜவுக்கு அதிமுகவின் தயவு தேவையில்லை.
வெள்ளத்தில் சிக்கித் தவித்த தமிழக மக்களுக்கு உதவாத பிரதமர் மோடி தற்போது ஓட்டுக்காக வாராவாரம் ஓடி வருகிறார் என்ற முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டு குறித்து? - வெள்ளத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மக்கள் சிக்கி தவித்தபோது, பாட்னாவில் இண்டியா கூட்டணி கட்சிகளுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பற்றி பேசும் தகுதி இல்லை.
பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பே இல்லாத தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை பிரதமர் வருவதால் உங்கள் கட்சிக்கு என்ன பலன்கள் கிடைத்துவிடும்? - வட இந்தியாவில் அனைத்து தொகுதிகள் உட்பட தெற்கில், கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா, ஆந்திராவில் அனைத்து தொகுதிகளிலும் பாஜகதான் வெற்றி பெற போகிறது. ஆனால், தமிழ்நாடு, கேரளாவில் கணிசமான தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்து அனைத்து இடங்களிலும் பாஜகவை வெற்றி பெற வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
கச்சத்தீவு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தாரை வார்க்கப்பட்டது உண்மையாக இருந்தாலும் கூட, இலங்கையிடமிருந்து அதனை மீட்க 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் எதுவும் செய்யவில்லைதானே? - மத்தியில் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தது. ஏன் கச்சத்தீவை மீட்க திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் முதலில் காரணம் கூறட்டும். அதன்பிறகு நாங்கள் கூறுகிறோம்.
தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரம் பெரிதாகும் நேரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது என்பது தேர்தல் நேர திசை திருப்பும் முயற்சி என்கிறார்களே? - கருப்பு பணம் ஒழிப்புக்காக கொண்டு வந்ததுதான் தேர்தல் பத்திரம். நாங்கள் திசைத்திருப்ப தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம் என்று நினைத்தால், தேர்தல் பத்திரத்தை பற்றியே பேசட்டுமே.
திமுக தனது சாதனைகள் என பல்வேறு திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்கிறது. தமிழகத்தில் பாஜக சாதனையாக கூறும் திட்டங்கள் என்ன? - 12 மருத்துக் கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனை, வந்தே பாரத் ரயில், குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி ஏவுதளம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000, முத்ரா கடன், தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறைகள், 2 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு 4 வழிச்சாலைகள் இப்படி பல்வேறு திட்டங்கள் மத்திய அரசு மூலமாக தான் தமிழகத்துக்கு வந்தன. அனைத்தையும் மோடிதான் செய்தார். ஆனால், திமுக அனைத்திலும் தங்கள் ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்கிறது.
பாஜகவின் 10 ஆண்டுகால செயல்பாடுகளை சொல்லாமல், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை சொல்லி வாக்கு வாங்கும் நிலையில்தான் பாஜக உள்ளதா? - அந்தந்த ஊருக்கு செல்லும்போது அங்கிருக்கும் முக்கிய தலைவர்களை நினைவுகூருவது என்பது ஒரு நாகரீகம். காமராஜர் ஆட்சியை அமைப்போம் என காங்கிரஸூம், ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம் என அதிமுகவும் சொல்லும்போது, கலைஞர் ஆட்சியை அமைப்போம் என சொல்லாமல், திரா விட மாடல்ஆட்சி என திமுகவினர் ஏன் கூறுகிறார்கள்? கலைஞர் ஆட்சி என கூறுவதற்கு திமுகவுக்கு தைரியம் இருக்கிறதா?
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே சென்றதற்கு அண்ணாமலையின் பேச்சும், அவர் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காததும் தான் முக்கிய காரணம் என கூறுகிறார்கள். அதுபற்றி உங்கள் கருத்து? - அதிமுக நிர்பந்தம் கொடுத்து பாஜக தலைவர்களை மாற்ற முடியாது. அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் மோடியிடம் பேசட்டும். எனக்கு, தெரிந்த வரை அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இரு கட்சிகளின் உறவுகளை ஊடகத்தின் முன் சரி செய்ய முடியாது. பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும்.
அண்ணாமலை போன்ற வேறொரு தலைவர் தமிழக பாஜகவுக்கு முன்பே கிடைத்திருந்தால் இங்கு பாஜக எப்போதோ பெரும் கட்சியாக வளர்ந்திருக்கும்போல தெரிகிறதே. உங்கள் கருத்து என்ன? - ஒவ்வொரு தலைவர்களின் காலகட்டங்கள் வேறு. அந்தந்த காலக்கட்டத்தில் அனைவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக அளித்திருக்கிறார்கள். பழையதலைவர்கள் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் இருந்தார்கள்.
தற்போது அவர்கள் இல்லை. தற்போது, அண்ணாமலைக்கு சில அரசியல் சூழல் சாதகமாக இருக்கிறது. ஆனால், அதேசமயம் அண்ணமலையின் அபார ஆற்றல், வேகம்,தலைமை பண்புகள் கட்சிக்கு பெரியதாக உதவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT