Published : 18 Mar 2024 06:22 AM
Last Updated : 18 Mar 2024 06:22 AM

அரசு விரைவு பேருந்துகளில் படுக்கை இருக்கைகளுக்கு கட்டண சலுகை வேண்டும்: மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

கோப்புப்படம்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் சிலீப்பர் பேருந்துகளிலும் கட்டணச் சலுகை அளிக்க வேண்டும் என்று முதல்வருக்கு தமிழ்நாடுஅனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில தலைவர் வில்சன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு போக்குவரத் துக் கழகங்களில் பணிபுரிந்து வரும் மாற்றுத் திறனாளி ஊழியர்களின் பல்வேறு குறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக கடந்த ஆண்டு அக்.3-ம் தேதி தனியாக குறைதீர் கூட்டம் நடத்தி விவாதிக்கப்பட்டது.

குறைதீர் கூட்டம்: இதுபோன்ற குறைதீர் கூட்டங்களை 6 மாதத்துக்கு ஒருமுறை தொடர்ந்து நடத்தி, அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கவேண்டும். அரசுப் பேருந்துகளில் பயணிக்கும்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளை அபகரித்து அமரும் பிற பயணிகளை எச்சரிக்கும் விதத்தில், அதற்கான அபராதத் தொகை ரூ.500 அல்லது ரூ.1,000 என இருக்கையின் மேல்புறத்தில் எழுதி விளம்பரம் செய்ய வேண்டும்.

ஊர்தி படி ரூ.2,500... அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு படுக்கை வசதியுடைய இருக்கைகள் சலுகைகட்டணத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. இணையதள முன்பதிவிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான படுக்கை வசதி காண்பிக்கப்படுவதில்லை. எனவே, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் படுக்கை வசதி இருக்கைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும்.

அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் ஊர்திபடி வழங்கப்படாத அனைத்துமாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கும், உடனடி ஊர்தி படி ரூ.2,500 வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x