

சென்னை: மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அதற்கு பழனிசாமியே காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பெங்களூரு வா.புகழேந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கொள்கை பரப்பு செயலாளர் பெங்களூரு வா.புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அதில் உரிய உத்தரவு பிறப்பிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு நேற்று முன்தினம் முடித்து வைக்கப்பட்டது. பின்னர், நீதிபதிகள் உத்தரவின்படி, தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அவர் நேற்று முன்தினம் புதிய மனு ஒன்றை வழங்கினார். நேற்று சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுகவை முழுமையாக அழித்துவிட வேண்டும் என்று பழனிசாமி கருதுகிறார். பன்னீர்செல்வம் இணைந்து செயல்படுவோம் என அழைத்தும் பழனிசாமி ஏற்கவில்லை. நாளை இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை, பழனிசாமிதான் காரணம். திமுக வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் அவர் செயல்படுகிறார்.
‘தாமரை சின்னத்தில் போட்டியிட நேர்ந்தால், தேர்தலை புறக்கணிப்போம்’ என்று பன்னீர்செல்வம் தெரிவித்ததாக வரும் தகவல் உண்மை அல்ல, வதந்தி. இரட்டை இலை கிடைக்காத பட்சத்தில், எங்களுக்கு தேர்தல் ஆணையம் கொடுக்கும் சின்னத்தில், கண்டிப்பாக போட்டியிடுவோம்.
நீதிமன்ற கருத்துப்படி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் சின்னங்கள் குறித்து முடிவு எடுக்காது. தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும். எங்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்குமாறு கோரி உள்ளோம். அப்படி இல்லை என்றால் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது.