Published : 17 Feb 2018 08:50 AM
Last Updated : 17 Feb 2018 08:50 AM
மோசடியான முறையில் வாடிக்கையாளர் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருந்தால் அதற்கு வங்கியே பொறுப்பு என்று தெரிவித்துள்ள நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர் இழந்த ரூ.1.20 லட்சத்தை வழங்க வேண்டுமென தனியார் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த அம்பாடி வேணு கோபாலன், சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
வெளிநாடு வாழ் இந்தியரான நான், அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருத்தேன். இந்நிலையில் கடந்த 2014 நவம்பர் 15-ம் தேதி எனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1,20,465-ஐ பார்த்தசாரதி கோஷ் என்பவருக்கு மோசடியான முறையில் மாற்றப்பட்டது தெரியவந்தது.
பொதுவாக மூன்றாம் நபருக்கு பணப் பரிமாற்றம் மேற்கொள்ள, பணம் பெறுபவரை நாம் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். அதோடு ஒன் டைம் பாஸ்வேர்டு (ஓடிபி) வாடிக்கையாளரின் மின்னஞ்சல் அல்லது செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனால், எனக்கு எந்த மின்னஞ்சலோ, எஸ்எம்எஸ்ஸோ வரவில்லை. இதுதொடர்பாக, 2014 நவம்பர் 19-ம் தேதி வங்கியின் மோசடி தடுப்பு துறைக்கும், வாடிக்கையாளர் சேவை மையத்துக்கும் மின்னஞ்சல் அனுப்பினேன்.
அதைத்தொடர்ந்து 2015 பிப்ரவரி 2-ம் தேதி பதிலளித்த வங்கி நிர்வாகம், `வாடிக்கையாளர் தனது சுய விவரங்களைப் பகிர்ந்துகொண்டால் மட்டுமே இணைய பணப் பரிமாற்றம் சாத்தியம். எனவே, இந்த விஷயத்தில் போலீஸாரின் விசாரணை தேவைப்படுகிறது. தங்கள் பணத்தை திருப்பி அளிக்க இயலாது' என்று தெரிவித்தது. ஆனால், பதிவு செய்யப்படாத நபர் எப்படி பணத்தைப் பெற்றுக்கொண்டார் என்பது குறித்து அதில் விளக்கப்படவில்லை. எனவே, வங்கியின் சேவை குறைபாட்டுக்காக எனக்கு ரூ.4.14 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர்மன்றத்தின் தலைவர் கே.ஜெயபாலன், உறுப்பினர் எம்.உயிரொளி கண்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: வாடிக்கையாளர்கள் தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனர். எனவே, அவர்களின் கணக்குக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது வங்கிகளின் கடமை. சந்தேகமான முறையில் மனுதாரரின் கணக்கில் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை வங்கி நிர்வாகம் ஒப்புக்கொள்கிறது.
மேலும், மோசடி நடைபெற்ற நாளன்று டாக்கா, தானே, சிட்டகாங், ஆம்ஸ்டர்டேம் என 4 வெவ்வேறு இடங்களில் இருந்து மனுதாரரின் வங்கிக் கணக்கை இயக்க முயற்சிகள் நடந்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மனுதாரர் தனது வங்கிக் கணக்கு பாஸ்வேர்ட் விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால், ஒரே வங்கிக் கணக்கு 4 வெவ்வேறு இடங்களில் இயக்கப்பட்டுள்ளது வங்கியின் பாதுகாப்பு குறைபாட்டைத்தான் காட்டுகிறது. எனவே, மனுதாரரிடமிருந்து மோசடியான முறையில் எடுக்கப்பட்ட ரூ.1,20,465-ஐ 9 சதவீத வட்டியுடன் வங்கி நிர்வாகம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.
ஆர்பிஐ விதிமுறை சொல்வது என்ன?
மோசடியான முறையில் வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருந்தால் வங்கிகள் பின்பற்ற வேண்டிய விரிவான விதிமுறையை(www.rbi.org.in/commonman/Tamil/Scripts/Notification.aspx?Id=2336) கடந்த 2017 ஜூலை 6-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, மோசடியாக பணம் எடுக்கப்பட்ட தேதியிலிருந்து 3 வேலை நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வங்கியிடம் புகார் தெரிவித்திருந்தால், பறிபோன பணம் முழுவதுக்கும் பொறுப்பேற்று அந்தப் பணத்தை 10 வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு வங்கி அளிக்க வேண்டும். 4 முதல் 7 நாட்களுக்குள் புகார் தெரிவிக்கப்பட்டால் பறிபோன தொகையில் குறிப்பிட்ட தொகைக்கு வாடிக்கையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT