Published : 18 Mar 2024 06:12 AM
Last Updated : 18 Mar 2024 06:12 AM

ரஷ்ய அதிபர் தேர்தல் | சென்னையில் வசிக்கும் ரஷ்யர்கள் வாக்களிப்பு: துணைத் தூதர் ஓலேக் என்.ஆவ்தீவ் தகவல்

தேர்தலை முன்னிட்டு, தங்கள் வாக்கை பதிவு செய்ய வந்த சென்னையில் வசிக்கும் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்கள்.

சென்னை: ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் தேர்தலில் சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் ரஷ்யர்கள் நேற்று வாக்களித்தனர்.

இதுகுறித்து ரஷ்ய துணைத் தூதர் ஓலேக் என்.ஆவ்தீவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத்தேர்தல் இன்று வரை நடைபெறுகிறது.

இத்தேர்தலில், தற்போதைய அதிபர் புதின் சுயேட்சையாக போட்டியிடும் சூழலில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன.

இத்தேர்தலில் வாக்களிக்க இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் சென்னை, திருவனந்தபுரம், புதுச்சேரி, பெங்களூரில் உள்ள துணைத் தூதரகங்களில் வாக்களிக்க முடியும்.

இதன்படி இந்தியாவில் உள்ள வெளிநாடு வாழ் ரஷ்ய மக்கள், இந்தியரை மணமுடித்த ரஷ்ய மக்கள், ரஷ்ய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையத்தில் பணிபுரிவோர் ஆகியோர் குடும்பத்தினருடன் வந்துவாக்களித்தனர். நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோரும் வாக்களித்தனர்.

சென்னையில் ரஷ்ய கலாச்சார மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு ரஷ்யர்கள் வந்து தங்களது கடவுச்சீட்டைக் காண்பித்து வாக்களித்தனர். அப்போது கடவுச்சீட்டை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சரிபார்த்து, அதிலுள்ள விவரங்களைப் பதிவு செய்தனர். பின்னர் அவர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது. அதையடுத்து அவர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டனர்.

ரஷ்ய நாட்டின் அதிபர் தேர்தலை முன்னிட்டு, சென்னை
தேனாம்பேட்டையில் உள்ள ரஷ்ய அறிவியல்
மற்றும் கலாச்சார மையத்தில், சென்னையில்
உள்ள ரஷ்ய துணை தூதரகத்தின் அதிகாரி
ஓலெக் என்.அவ்தீவ் தனது வாக்கை பதிவு செய்தார்.

இவ்வாறு சென்னையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வாக்களித்தனர். தென் இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். இன்றுடன் தேர்தல் முடிவடையும் நிலையில், இன்றிரவு முதல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

சிறந்த ஜனநாயக நாடாக ரஷ்யாதிகழ்கிறது. மக்களுக்கு அங்குஅதிக சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 140 கோடி மக்கள் தொகைகொண்ட இந்தியாவில் ஜனநாயகம்நன்றாக இருக்கிறது. இதற்குஇங்குள்ள கட்டமைப்பே காரணம். இவ்வாறு துணைத் தூதர் ஓலேக் என்.ஆவ்தீவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x