Published : 16 Mar 2024 09:24 PM
Last Updated : 16 Mar 2024 09:24 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 967 வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 237 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று மாலையில் செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த உடனே புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இது தேர்தல் முடியும் வரை இது அமலில் இருக்கும். பறக்கும் படைகள், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் கண்காணிப்பு அறைகள் அமைக்கப்பட்டு தேர்தல் விதிமீறல்கள் கண்காணிக்கப்படுகிறது. தனியார் மற்றும் பொது நிறுவன சுவர்களில் எழுதப்பட்ட விளம்பரங்கள் அழிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் அரசியல் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடாது. உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்திருக்கும் 196 பேரில் 50 சதவீதம் பேர் அவற்றை ஒப்படைத்துள்ளனர்.
புதுச்சேரியில் 967 வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையத்தை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் 15 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. 75 வாக்குச் சாவடிகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
6 ஆயிரம் ஊழியர்கள், 4745 காவலர்கள் மற்றும் 12 கம்பெனியை சேர்ந்த 1100 துணை ராணுவத்தினர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதுச்சேரியில் 237 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்.
மேலும் புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பிரத்யேகமாக 30 மகளிர் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். புதுச்சேரியில்-3, காரைக்காலில்-1 என 4 வாக்குச்சாவடிகள் இளைஞர்கள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடியாக அமைக்கப்படும்.
இதேபோல் 4 வாக்குச்சாவடிகள் அனைத்து மாற்றுத்திறனாளிகள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகளாக அமைக்கப்படும். 12 வாக்குச்சாவடிகள் சுற்றுச்சூழல் போற்றும் வகையில் அமைக்கப்படும். புதுச்சேரி மிஷன் வீதி உள்ள வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அதன் பிராங்கோ-தமிழ் கட்டிடக்கலை பாரம்பரியம் மற்றும் அதன் சமீபத்திய மறுசீரமைப்பு காரணமாக யூனியன் பிரதேசத்தில் தனித்துவமான வாக்குச்சாவடி என அடையாளம் காணப்பட்டுள்ளது. போதிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் கையிருப்பு உள்ளது.
1.1.2024 தேதியை தகுதி தேதியாகக் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்-4,79,329, பெண்-5,41,437, மூன்றாம் பாலினம்-148) இதில் 308 சேவை வாக்காளர்கள் மற்றும் 363 வெளிநாடு வாழ் இந்திய வாக்காளர்கள் அடங்குவர்.
முதன்முறையாக 28,403 பேர் வாக்களிக்கவுள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையுடன், 12 அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளையும் பயன்படுத்தி வாக்களிக்கலாம். புகைப்பட வாக்காளர் சீட்டு வாக்களிக்க பயன்படாது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அசல் பார்ஸ்போர்ட் மட்டுமே அடையாள ஆவணமாக ஏற்கப்படும்.
வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்படும். மதுக்கடைகள், ரெஸ்டோ பார்கள் அனைத்தும் காலை முதல் இரவு 10 மணிக்குள் மட்டுமே செயல்படமுடியும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை செயல்பட அனுமதி இல்லை.
வேட்பாளர்கள் தலா ரூ.75 லட்சம் வரை செலவிடலாம். பொதுமக்கள், வியாபாரிகள் ரூ.50 ஆயிரம் வரை எடுத்துச் செல்லாம். அதற்குமேல் பணம் எடுத்துச் சென்றால் உரிய ஆவணங்களை காண்பிக்க வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலில் 46 வழக்குகள் பதியப்பட்டு, அதில் 20 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. தவறு செய்யும் அரசு ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இந்த பேட்டியின் போது புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், துணை தலைமைத் தேர்தல் அதிகாரி தில்லைவேல் ஆகியோர் உடனிருந்தனர். இறுதியாக வாக்காளர் கையேடு வெளியிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT