Last Updated : 16 Mar, 2024 08:33 PM

 

Published : 16 Mar 2024 08:33 PM
Last Updated : 16 Mar 2024 08:33 PM

புதுச்சேரி பாஜக வேட்பாளர் யார்? - கட்சித் தலைமைக்கு 4 பேர் பட்டியல் அனுப்பிவைப்பு

புதுச்சேரி: “கட்சித் தலைமை உத்தரவிட்டால் புதுச்சேரி மக்களவை தேர்தலில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுவார்” என்று மாநில பாஜக தலைவர் செல்வகணபதி எம்.பி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சனிக்கிழமை கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “தேர்தல் நேரம் என்பதால் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிதானம் இழந்து பேசுவது சரியல்ல. அவர் தனது கட்சித் தலைவர்களையே சந்தித்துப் பேச முடியாத நிலையில்தான் உள்ளார். மத்திய அமைச்சர் உள்ளிட்ட உயர்ந்த பொறுப்புகளில் இருந்த நாராயணசாமியால் புதுச்சேரிக்கு என்ன லாபம்?

அவர் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை விமர்சித்து பேசியுள்ளார். அவர்களை பற்றி பேச நாராயணசாமி தகுதியற்றவர். உலகமே பிரதமரை பாராட்டுகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு செய்த சாதனைகளை சொல்லித்தான் வாக்கு கேட்க போகின்றோம். எங்களது வெற்றி நிச்சயப்படுத்தப்பட்ட வெற்றி. நிச்சயமாக 400 எம்பிக்களை பெற்று மீண்டும் பிரதமராக நரேந்திரமோடி அரியணையில் அமர இருக்கின்றார். இதனை உலகமே சொல்கிறது.

பாஜகவுக்கு ஆதரவு தருவதாக சொல்லி வரும் சுயேச்சை எம்எல்ஏ சிவசங்கரன் தவறான தகவலை பரப்புகிறார். அவர் பாஜகவை சேர்ந்தவர் இல்லை. அவர் இருந்தால் தான் இந்த அரசு நடக்கும் என்பது கிடையாது. அவரது துணை இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தும். அதற்கான பலம் எங்களிடம் இருக்கிறது.

சிவசங்கரனை மக்களவை வேட்பாளமாக நாங்கள் அறிவிப்போம் என்று கனவு கண்பது அவரது தவறு. அவருக்கு கிடைக்காது என்று தெரிந்ததால்தான் மக்களவையில் போட்டியிட ரூ.50 கோடி பணம் இருந்தால் வேட்பாளராக தலைமை அறிவிக்கும் என்று திரித்து கூறியுள்ளார். எங்கள் கட்சியைச் சேரந்தவர்தான் வேட்பாளராக போட்டியிட முடியும். பாஜக அல்லாதவர்களை எப்படி வேட்பாளர்களாக்க முடியும்? தவறான கருத்தை தெரிவித்துள்ள சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கரனை வரும் காலங்களில் எங்களுடன் இணைத்துக்கொள்ளவோ, இணைத்து பேசவோ மாட்டோம்.

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களை மாநிலத் தலைவர், நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் பட்டியல் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமை உத்தரவிட்டால் புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் நமச்சிவாயம் போட்டியிடுவார். மக்களவை தேர்தலில் எங்களது சாதனைகளை கூறி வாக்குக் கேட்போம்.

புதுச்சேரி தொகுதியில் வெளிமாநில வேட்பாளர் ஏற்கெனவே போட்டியிட்டுள்ளனர். ஆகவே, பாஜக சார்பில் மத்திய தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரை வெற்றி பெறச்செய்வோம்.

தேர்தல் நன்கொடைப் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நிதி விவரங்களை வெளிப்படைத் தன்மையாக்கியது பாஜக. மிகப் பெரிய அரசியல் கட்சியான பாஜகவுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி வழங்கியதில் ஆச்சரியமில்லை. திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட சிறிய கட்சிகள் கூட பெரிய அளவில் தேர்தல் நிதி நன்கொடை பெற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சி 4 இடங்கள், 5 இடங்கள் தாருங்கள் என்று கேட்டு மண்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் அத்தகைய நிலைமையில் இல்லை. மாநில கட்சிகள் எங்களை நாடி வந்து கொண்டிருக்கின்றன. தென்மாநிலங்களை பொறுத்தவரையில் நாங்கள் வளர்ந்து கொண்டிக்கின்றோம்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சிறுமி கொலை வழக்கில் கைதானவர்களை பாஜகவுடன் இணைத்து பேசுவது குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப் பதியாவிடில், நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்குத் தொடரப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x