Published : 16 Mar 2024 01:54 PM
Last Updated : 16 Mar 2024 01:54 PM
சென்னை: தமிழகம் என்பது, பாஜகவின் எதிர்ப்பு பூமி. தமிழக மக்கள் எந்த காலத்திலும் பாஜகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விரைவில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 10 ஆண்டு கால ஒன்றிய பாஜக அரசின் தமிழக விரோதப் போக்கிற்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி திமுக - காங்கிரஸ் கூட்டணியையும், இண்டியா கூட்டணிக் கட்சிகளையும் கடுமையாக சாடிப் பேசிய நிலையில் செல்வப்பெருந்தகை இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “கன்னியாகுமரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, திமுக., காங்கிரஸ் கூட்டணியைப் பற்றி ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். இக்கூட்டணியின் நோக்கம் ஊழல் ஆட்சியின் மூலம் கொள்ளையடிக்க வேண்டுமென்பது தான் இலக்கு என்று பேசியிருக்கிறார். 2ஜி யில் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
அன்று சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில், 2ஜி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில், டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு சில ஆண்டுகள் நடைபெற்று, எந்த ஆதாரத்தையும் குற்றம் சாட்டியவர்கள் வழங்க முடியாத காரணத்தால் குற்றவாளிகளை நிரபராதிகள் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தமது தீர்ப்பில் கூறியிருந்தார். குற்றச்சாட்டு கூறியவர்கள் ஆதாரம் தருவார்கள் என்று பல மாதங்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தேன் என்றும் அவர் கூறியதை எவரும் மறக்க இயலாது. உண்மைநிலை இருப்படியிருக்க திரும்பவும் 2ஜி சேற்றை வாரி இறைப்பது பிரதமர் பதவியில் இருக்கும் மோடிக்கு அழகல்ல.
அன்று 2ஜி அறிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுத்ததைப் போல, 2023 டிசம்பரில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையின் 7 திட்டங்களை ஆய்வு செய்தது. அதன்படி பாரத் மாலா திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள சாலைகள், நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகளை இணைக்கும் திட்டத்தின் முதல் கட்டத்தில் 34,800 கி.மீ. தூரம் சாலை அமைக்க ரூபாய் 5 லட்சத்து 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 1 கி.மீ. தூரமுள்ள சாலைக்கு ரூபாய் 15.37 கோடி டெண்டர் மூலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், 26,316 கி.மீ. தூரம் சாலை அமைக்க ரூபாய் 8 லட்சத்து 46 ஆயிரத்து 588 கோடி செலவாகியிருக்கிறது. அதன்படி 1 கி.மீ. சாலை அமைக்க ரூபாய் 32.17 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 1 கி.மீ. தூரம் சாலை அமைக்க ரூபாய் 16.80 கோடி அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. அதேபோல, துவாரகா சாலை திட்டத்திற்காக ரூபாய் 9,000 கோடி ஒதுக்கப்பட்டது. 1 கி.மீ. தூரத்திற்கு ரூபாய் 18 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், செலவழிக்கப்பட்டதோ ரூபாய் 250 கோடி. இது ஏறத்தாழ 13 மடங்கு அதிகமாகும்.
மேலும், நாட்டிலுள்ள 600 சுங்கச்சாவடிகளில் 5 சுங்கச்சாவடிகளை சி.ஏ.ஜி. ஆய்வு செய்தது. அதில் சட்ட விதிகளுக்கு புறம்பாக ரூபாய் 132 கோடி வசூல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் குறித்து சி.ஏ.ஜி. அறிவிப்பின் அடிப்படையில், அன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததைப் போல இன்று எந்த நடவடிக்கையையும் பாஜக அரசு ஏன் எடுக்கவில்லை ? தன்னை புனிதமானவர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிற மோடி, சி.ஏ.ஜி. அறிக்கைக்கு என்ன பதில் கூறப் போகிறார் ? இது ஊழல் இல்லை என்றால் எது ஊழல் என்பதை மோடி விளக்க வேண்டும் ?
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் டாக்டர் மன்மோகன்சிங் உள்ளிட்ட எந்த காங்கிரஸ் தலைவர்கள் மீதும், எந்த நீதிமன்றத்திலும், எந்த ஊழல் வழக்கும் இல்லை. அப்படி ஏதாவது ஊழல் நடந்திருந்தால் 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டுவதற்கு மோடிக்கு எந்த உரிமையும் இல்லை.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் என்று மோடி குற்றம் சாட்டியிருக்கிறார். தமிழகத்தில் பாரம்பரியமாக நடந்து வந்த ஜல்லிக்கட்டுக்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவி விலகுகிற 2014 ஆம் ஆண்டு வரை எந்த தடையும் விதிக்கப்படவில்லை. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மிகச் சிறப்பாக நடந்து வந்தது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2015 இல் முதல் முறையாக தடை விதிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு எடுத்த தீவிர முயற்சியின் விளைவாக விதிவிலக்கு பெற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மீண்டும் ஒன்றிய அரசு விதித்த தடையை எதிர்த்து தான் மெரினாவில் மாபெரும் போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெறப்பட்டது. இத்தகைய உரிமைப் போராட்ட வரலாற்றை முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இது தமிழக மக்களிடம் எடுபடாது.
தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழ் மொழியின் மீது பாசத்தை பொழிவது போல் பேசுகிறார் பிரதமர் மோடி. உங்களிடம் தமிழில் பேசப் போகிறேன் என்கிறார். உங்கள் மொழிக்கு மரியாதை வழங்க துடித்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார். ஆனால், செம்மொழி தகுதி பெற்ற தமிழ் மொழிக்கு 2017 முதல் 2020 வரை ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை ரூபாய் 12.31 கோடி மட்டுமே.
ஆனால், 24,000 பேர் மட்டுமே பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு அதே காலக்கட்டத்தில் ஒதுக்கிய தொகை ரூபாய் 643.84 கோடி . 8 கோடி மக்கள் பேசுகிற தமிழ் மொழிக்கு ஒதுக்கிய தொகையை விட 50 மடங்கு அதிகமாக காலாவதியான சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் மோடியின் தமிழ் பாசத்திற்கு அடையாளம். மோடியின் இரட்டை வேடத்திற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் ?
மோடியின் தமிழக விரோத போக்கை முற்றிலும் அறிந்து வைத்திருக்கிற தமிழ்நாட்டு மக்கள் இதற்கெல்லாம் ஏமாற மாட்டார்கள். மோடி தமிழகத்திற்கு எத்தனை முறை வந்தாலும் மக்களின் வெறுப்பிற்கும், கோபத்திற்கும் ஆளாகியிருப்பதிலிருந்து மோடி மீளவே முடியாது. தமிழ்நாடு என்பது, பாஜகவின் எதிர்ப்பு பூமி. தமிழக மக்கள் எந்த காலத்திலும் பாஜகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விரைவில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 10 ஆண்டு கால ஒன்றிய பாஜக அரசின் தமிழக விரோதப் போக்கிற்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT