Published : 16 Mar 2024 01:15 PM
Last Updated : 16 Mar 2024 01:15 PM

“விஷ்வகுருவா, மவுனகுருவா?” - மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு சர்ச்சையில் பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் | பிரதமர் மோடி

சென்னை: “விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்?... தன் சொந்த இயலாமையை மறைக்கத் திமுக மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, “இண்டியா கூட்டணியினர் தமிழகமக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் நமது மீனவர்கள் தூக்கிலிடப்பட்டபோது, நான் தலையிட்டு, எவ்வித சேதாரமும் இல்லாமல், மீனவர்களை பாதுகாப்புடன் தாயகத்துக்கு அழைத்து வந்தேன்.

வெள்ளிக் கிழமை கன்னியாகுமரியில் பேசிய பிரதமர் மோடி, “இண்டியா கூட்டணியினர் தமிழகமக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் நமது மீனவர்கள் தூக்கிலிடப்பட்டபோது, நான் தலையிட்டு, எவ்வித சேதாரமும் இல்லாமல், மீனவர்களை பாதுகாப்புடன் தாயகத்துக்கு அழைத்து வந்தேன்.

இதுபோன்ற சில அடிப்படைத் துயரங்களுக்கு வித்திட்டது திமுகவும், காங்கிரஸும்தான். மக்கள் மீது புழுதியை வாரி இறைத்துவிட்டு, தங்களின் நலனில் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார்கள். திமுகவும், காங்கிரஸும் செய்த பாவங்களுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்” என விமர்சித்துப் பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த காலத்தில் திமுக செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழக மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார்.

திமுக அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றைத் தமிழக மக்கள் நன்கறிவார்கள். நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத்தான் பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா?. கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?. அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பாஜக அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய்திறக்காதது ஏன்?... படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரப்பூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்?

இரண்டாவது முறையாகக் கைது செய்யப்படும் மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பாஜக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?... இதற்கெல்லாம் பதிலில்லை. தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழத்துக்கு செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று #பதில்_சொல்லுங்க_பிரதமரே என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை! ஆனால், வழக்கமான புளுகுகளும் புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன.

விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்?... தன் சொந்த இயலாமையை மறைக்கத் திமுக மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x