Published : 16 Mar 2024 12:20 PM
Last Updated : 16 Mar 2024 12:20 PM
சென்னை: “தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆளுநரின் தனி ராஜ்ஜியத்துக்கு முடிவு கட்டப்படும். பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்தத் தடையும் இல்லை. தேர்தல் தேதி அறிவித்தாலும் தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து பதவி ஏற்பு விழா நடத்தப்படும்” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, “ஒரு தேர்தல் ஆணையர் தேர்தலுக்கு முன்பாக தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இதுவே மிகப் பெரிய கேள்விக்குறி. அடுத்ததாக திடீரென இரண்டு பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியும் தேர்தல் ஆணையர் நியமனத்தில் இருக்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த கோரிக்கையை உதாசினப்படுத்திவிட்டு இன்றைய மத்திய அரசு தேர்தல் ஆணையர்களை நியமித்திருப்பதும் கேள்விக்குறியதுதான்.
தேர்தல் ஆணையத்தை அவர்கள் ஒரு கைப்கைப்பாயாக பயன்படுத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜனநாயகத்தில் அதை நாங்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் இறுதி வெற்றி இண்டியா கூட்டணிக்குதான் கிடைக்கும். அப்பொழுது யார் யாரெல்லாம் இன்று பழி வாங்குகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டார்களோ அவர்கள்மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். மனிதாபிமானம் பாராமல் பழிவாங்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம்.
ஆளுநர் திடீரென துணை வேந்தர்களுக்கு பதவி நீடிப்புகளையும், பதவி உயர்வுகளையும் கொடுத்து வருகிறார். நமது சட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு துணைவேந்தர் என நியமித்திருக்கிறோம். ஆனால் தனக்கு வேண்டியவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு பதவி நீடிப்பை வழங்கி வருகிறார். ஏதோ ஆளுநர் ஒரு தனி ராஜ்ஜியத்தை நடத்துவது போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
தேர்தல் முடிவுக்கு பிறகு ஆளுநரின் தனி ராஜ்ஜியத்துக்கு முடிவு கட்டப்படும். பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை. தேர்தல் தேதி அறிவித்தாலும் தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து பதவி ஏற்பு விழா நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT